வேட்புமனுவை ஏற்காததால் அ.இஅ.தி.மு.க. ஜெ.ஜெயலலிதா அணியினர் சாலைமறியல்
வேட்புமனுவை ஏற்காததால் அ.இ.அ.தி.மு.க. ஜெ.ஜெயலலிதா அணியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ராயபுரம்,
எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையில் இருந்து பிரிந்து அ.இ.அ.தி.மு.க. ஜெ.ஜெயலலிதா அணி உருவானது. சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று அ.இ.அ.தி.மு.க. ஜெ.ஜெயலலிதா அணி சார்பில் எம்.கீதா தண்டையார்பேட்டை மண்டல அலுவலகத்துக்கு சுயேச்சையாக மனுதாக்கல் செய்ய வந்திருந்தார். அவருடன் அந்த அணியின் பொதுச்செயலாளர் பசும்பொன் பாண்டியன் உள்பட பலர் வந்திருந்தனர்.
வேட்புமனு தாக்கல் செய்ய நேற்று இரவு கடைசியாக கீதா சென்றபோது அவர் டோக்கன் வாங்கவில்லை எனக்கூறி மனுவை வாங்க தேர்தல் நடத்தும் அதிகாரி மறுத்துவிட்டார்.
இதனால் மனுவை வாங்க மறுத்த அதிகாரியையும், தமிழக அரசையும் கண்டித்து கோஷமிட்ட அந்த அணியினர் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவலறிந்து சம்பவ இடத்துக்கு தண்டையார்பேட்டை போலீசார் விரைந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து பசும்பொன் பாண்டியன் கூறுகையில், இந்த தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக ஒருதலைபட்சமாக செயல்படுகிறது. காலை முதல் எங்களை காக்க வைத்துவிட்டு கடைசியில் மனுவை வாங்காமல் மறுத்தது ஜனநாயகத்துக்கு எதிரான செயல். எங்களுக்கு நீதி கிடைக்க கோர்ட்டுக்கு செல்ல உள்ளோம் என்றார்.
இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.