அம்பத்தூரில்: மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதியதில் பள்ளி ஆசிரியை பலி
அம்பத்தூரில் மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் பள்ளி ஆசிரியை பரிதாபமாக உயிரிழந்தார். அவரது கணவர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
அம்பத்தூர்,
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த பஞ்செட்டியை சேர்ந்தவர் ரமேஷ் குமார் (வயது 41). இவர் சினிமாவில் துணை நடிகராக உள்ளார். இவரது மனைவி மோகனப்பிரியா (37). இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.
மோகனப்பிரியா, பஞ்செட்டியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். அந்த பள்ளி வளாகத்தில் உள்ள ஆசிரியர்கள் குடியிருப்பில் இவர்கள் குடும்பத்துடன் வசித்து வந்தனர்.
மோகனப்பிரியா நேற்று காலையில் கணவர் ரமேஷ் குமாருடன் மோட்டார் சைக்கிளில் சென்னை முகப்பேரில் உள்ள வங்கிக்கு சென்று கொண்டு இருந்தார். அம்பத்தூர் அத்திப்பட்டு ஜங்ஷன் அருகே வரும்போது பின்னால் வந்த வேன் ஒன்று அவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் கணவன், மனைவி இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். உடனே அவர்கள் இருவரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு முகப்பேரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே மோகனப்பிரியா பரிதாபமாக இறந்து விட்டார். ரமேஷ் குமாருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், விபத்து ஏற்படுத்திய வேன் ஓட்டுனர் செல்வத்தை (21) கைது செய்தனர். இறந்த ஆசிரியையின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில், பள்ளி ஆசிரியை இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.