எம்.எல்.ஏ.க்களுடன் சென்று குமரி மாவட்ட கலெக்டரை சந்தித்த மு.க.ஸ்டாலின்


எம்.எல்.ஏ.க்களுடன் சென்று குமரி மாவட்ட கலெக்டரை சந்தித்த மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 5 Dec 2017 4:00 AM IST (Updated: 5 Dec 2017 1:44 AM IST)
t-max-icont-min-icon

எம்.எல்.ஏ.க்களுடன் சென்று குமரி மாவட்ட கலெக்டரை மு.க.ஸ்டாலின் சந்தித்தார். நிவாரண பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

நாகர்கோவில்,

நாகர்கோவிலில் புயல், மழை சேதங்களை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் நாகர்கோவில் திரும்பிய அவர் கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று, கலெக்டர் சஜ்ஜன்சிங் சவானை சந்தித்தார். எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ்ராஜன், ஆஸ்டின், மனோ தங்கராஜ், பிரின்ஸ் ஆகியோரும் உடன் சென்று இருந்தனர்.

புயல், மழை சேதத்துக்கு மேற்கொள்ள வேண்டிய விரைவான நிவாரண பணிகள் குறித்தும், மீனவர் மீட்பு பணிகளை துரிதப்படுத்த கோரியும் மனு அளித்தார். குமரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து கலெக்டரிடம் கேட்டார். அரசு சார்பில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான், மு.க.ஸ்டாலினிடம் விளக்கி கூறினார்.

முன்னதாக முட்டம் பகுதியில் உள்ள மீன்பிடி துறைமுகத்துக்கு வந்த அவரை மீனவர்கள், பங்கு தந்தைகள் வரவேற்று மீன்பிடி விசைப்படகு மூலம் அவரை கடலுக்குள் அழைத்து சென்றனர். கடலில் அமைக்கப்பட்டு இருந்த தூண்டில் வளைவு, புயலால் சேதம் அடைந்து இருப்பதை பார்வையிட்டார்.

சேத விவரங்களை மீனவர்கள் விளக்கி கூறினர். தூண்டில் வளைவை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக்கொண்டனர். மதியம் 1 மணி முதல் 1.30 மணி வரை விசைப்படகில் இருந்தவாறே மு.க.ஸ்டாலின் சேதங்களை பார்வையிட்டார். பின்னர் கரைக்கு வந்த அவர் மற்ற இடங்களுக்கு சென்று ஆய்வுப்பணியை தொடர்ந்தார்.


Next Story