சம்பள நிலுவை தொகையை வழங்கக்கோரி பாண்டெக்ஸ் தொழிலாளர்கள் தர்ணா


சம்பள நிலுவை தொகையை வழங்கக்கோரி பாண்டெக்ஸ் தொழிலாளர்கள் தர்ணா
x
தினத்தந்தி 5 Dec 2017 2:45 AM IST (Updated: 5 Dec 2017 2:12 AM IST)
t-max-icont-min-icon

சம்பள நிலுவை தொகையை வழங்கக்கோரி பாண்டெக்ஸ் தொழிலாளர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.

புதுச்சேரி,

புதுவை தட்டாஞ்சாவடி பாண்டெக்ஸ் சாயப்பிரிவில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கடந்த 10 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை, தீபாவளி பண்டிகைக்காக அரசு அறிவித்த போனஸ் தொகையும் வழங்கப்படவில்லை. இதனை தொழிலாளர்கள் கூட்டுறவு சங்க பதிவாளர் கவனத்திற்கு கொண்டு சென்றபோது பதிவாளர் உடனே சம்பளம் மற்றும் போனஸ் வழங்க உத்தரவிட்டுள்ளார். ஆனால் இந்த உத்தரவை பாண்டெக்ஸ் நிர்வாகம் ஏற்றுக்கொள்ளவில்லை.

இதனை கண்டித்து ஏ.ஐ.டி.யூ.சி. பாண்டெக்ஸ் தொழிலாளர்கள் சங்கத்தினர் பலகட்ட போராட்டங்களை நடத்தினர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் நேற்று காலை அவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தட்டாஞ்சாவடியில் உள்ள கூட்டுறவுத்துறை அலுவலக வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்திற்கு சங்க தலைவர் முருகன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் அபிஷேகம், வட்டார கைத்தறி நெசவு தொழிலாளர்கள் சங்க தலைவர் செல்வராஜ், சாயப்பிரிவு தொழிலாளர்கள் சங்கத்தின் பொருளாளர் குட்டன் மற்றும் நிர்வாகிகள் அன்னலட்சுமி ஜெய்கணேஷ், நாகராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷமிட்டனர்.


Next Story