அனைவருக்கும் வேலை உறுதி திட்டத்தில் வேலை வழங்க கோரி பெண்கள் முற்றுகை


அனைவருக்கும் வேலை உறுதி திட்டத்தில் வேலை வழங்க கோரி பெண்கள் முற்றுகை
x
தினத்தந்தி 5 Dec 2017 3:45 AM IST (Updated: 5 Dec 2017 3:12 AM IST)
t-max-icont-min-icon

அனைவருக்கும் வேலை உறுதி திட்டத்தில் வேலை வழங்க கோரி கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பெண்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் முதல் நிலை ஊராட்சியில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். நேற்று கடம்பத்தூர் வைசாலிநகர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்ட பெண்கள் கையில் மண்வெட்டி, மண் அள்ளும் சட்டி உள்ளிட்டவைகளுடன் வந்து கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலக நுழைவு வாயில் முன்பு அமர்ந்து திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள், வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்குள் எந்த வாகனங்களையும் அனுமதிக்காமல் கோ‌ஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கூறியதாவது:கடம்பத்தூர் முதல் நிலை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும் நாங்கள் அனைவரும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ஏரி மற்றும் குளங்களை தூர்வாரும் பணி, சாலைப்பணி உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறோம்.

ஆனால் அதிகாரிகள், எங்களுக்கு அரசு அறிவித்ததுபோல் 100 நாள் வேலை அளிக்காமல் அலைக்கழித்து வருகின்றனர். குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே வேலை அளித்து மீதமுள்ளவர்களுக்கு வேலை இல்லை எனக்கூறி திருப்பி அனுப்பி விடுகின்றனர். இதனால் நாங்கள் வேலை இல்லாமல் அவதிப்பட்டு வருகிறோம். எங்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் தொடர்ந்து பணி வழங்கக்கோரி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் வேலை வழங்கவில்லை.

இதனால் பாதிக்கப்பட்ட நாங்கள், கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு வந்து அதிகாரிகளிடம், மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தில் எங்களுக்கு வேலை வழங்கக்கோரி முறையிட்டோம். ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மனவேதனை அடைந்தோம்.

எனவே நாங்கள், 100 நாள் வேலை திட்டத்தில் பணி செய்யும் உபகரணங்களுடன் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம். எங்கள் அனைவருக்கும் 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் வேலை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதையடுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம், வட்டார வளர்ச்சி அலுவலர் வீரராகவன் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இது பற்றி தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதை ஏற்று 2 மணி நேரமாக நடந்த போராட்டத்தை கைவிட்டு பெண்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.


Next Story