டி.வி. அறையை அடித்து நொறுக்கியதால் கோஷ்டி மோதல் 7 பேர் கைது
படம் சரியாக தெரியாததால் கேபிள் டி.வி. அறையை அடித்து நொறுக்கியதால் கோஷ்டி மோதல் 7 பேர் கைது செய்யப்பட்டது.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த ஏகாட்டூர் காலனி பெருமாள்கோவில் தெருவைச் சேர்ந்தவர் முருகேசன்(வயது 44). இவர், அதிகத்தூர் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக கேபிள் டி.வி. வைத்து நடத்தி வருகிறார்.
நேற்றுமுன்தினம் அதிகத்தூரைச் சேர்ந்த ஸ்ரீதரன்(29) தனது வீட்டில் கேபிள் டி.வி. இணைப்பு சரியில்லாததால் படம் நன்றாக தெரியவில்லை என்று கூறி அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர்களான சுரேஷ்(24), அவருடைய சகோதரர் யுவனேஸ்(25), நண்பர் ஜெயக்குமார்(31) ஆகியோருடன் சேர்ந்து முருகேசனின் கேபிள் டி.வி. அறை பூட்டை உடைத்து அங்கிருந்த உபகரணங்களை அடித்து நொறுக்கினார்.
இதனால் ஆத்திரம் அடைந்த முருகேசன், தனது சகோதரர் உதயகுமார்(39), மகன் விமல்குமார்(23) ஆகியோருடன் சென்று ஸ்ரீதரையும், அவரது நண்பர்களையும் தாக்கினர். இதனால் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
இந்த மோதல் சம்பவம் குறித்து இரு தரப்பினரும் தனித்தனியாக கடம்பத்தூர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாலு, சப்–இன்ஸ்பெக்டர்கள் ஆறுமுகம், சதாசிவம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மோதலில் ஈடுபட்டதாக முருகேசன், ஸ்ரீதரன் உள்பட இரு தரப்பினரையும் சேர்ந்த மேற்கண்ட 7 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.