மும்பையில் கடற்படை தினவிழா: பார்வையாளர்களை கவர்ந்த கடற்படை வீரர்கள் சாகசம்
மும்பையில் கடற்படை தினவிழா கொண்டாடப்பட்டது. அப்போது நடந்த கடற்படை வீரர்களின் சாகச நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
மும்பை,
மும்பையில் கடற்படை வார விழா கடந்த 1–ந்தேதி முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்திய கடற்படை கடந்த 1971–ம் ஆண்டு டிசம்பர் 4–ந்தேதி பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள அந்நாட்டு கடற்படை தலைமையகத்தின் மீது மிகப்பெரிய தாக்குதலை நடத்தியது. இது இந்திய கடற்படையின் மிகப்பெரிய வெற்றியாக கருதப்படுகிறது.
இந்த வெற்றியின் நினைவாக ஆண்டு தோறும் டிசம்பர் 4–ந்தேதி இந்திய கடற்படை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டிற்கான கடற்படை தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி மும்பையில் உள்ள ‘கேட்வே ஆப் இந்தியா’வில் கடற்படை வீரர்களின் அணிவகுப்பு மற்றும் சாகச நிகழ்ச்சிகள் நடந்தன. இதில், கடற்படை வீரர்கள் ஹெலிகாப்டர்களில் பறந்தபடி சாகசங்களை செய்து காண்பித்தனர். அவர்களின் அணிவகுப்பு, பயங்கரவாத தாக்குதலுக்கு எதிரான பாதுகாப்பு ஒத்திகை ஆகியவை பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தன.
விழாவில் கடற்படை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.