ஆம்புலன்ஸ்– லாரி நேருக்கு நேர் மோதல்; தாய், மகன் உள்பட 4 பேர் சாவு


ஆம்புலன்ஸ்– லாரி நேருக்கு நேர் மோதல்; தாய், மகன் உள்பட 4 பேர் சாவு
x
தினத்தந்தி 5 Dec 2017 3:52 AM IST (Updated: 5 Dec 2017 10:15 PM IST)
t-max-icont-min-icon

நாக்பூரில் ஆம்புலன்ஸ்– லாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் தாய்– மகன் உள்பட 4 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர்.

நாக்பூர்,

அகோலாவை சேர்ந்த 12 வயது சிறுவன் ஆகாஷ். இவன் கால் முறிவு காரணமாக உள்ளூர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தான். இந்த நிலையில், மேல்– சிகிச்சைக்காக நேற்று அதிகாலை ஆம்புலன்சில் நாக்பூரில் உள்ள மாயோ ஆஸ்பத்திரிக்கு சிறுவன் அழைத்து வரப்பட்டான். அவனுடன் தாய் விமலா மற்றும் உறவினர்கள் இருந்தனர்.

நாக்பூர் அருகே அமராவதி சாலையில் பவர் ஹவுஸ் பகுதியில் ஆம்புலன்ஸ் சென்ற போது, எதிரே வந்த லாரி ஒன்று திடீரென கண்ணிமைக்கும் நேரத்தில் ஆம்புலன்ஸ் மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் ஆம்புலன்ஸ் ஒருபக்கமாக கவிழ்ந்தது. அதன் டிரைவர் உள்பட 9 பேர் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர்.

விபத்தை ஏற்படுத்திய லாரியும் சுக்குநூறாக நொறுங்கியது. தகவல் அறிந்து வந்த போலீசார், ஆம்புலன்சின் இடிபாடுகளை அகற்றி, படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். எனினும், சிறுவன் ஆகாஷ், தாய் விமலா உள்ளிட்ட 4 பேர் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர்.

மேலும், 5 பேர் பலத்த காயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகாலை நேரம் என்பதால், சாலை எங்கும் பனிமூட்டம் சூழ்ந்து நின்றதால், இந்த விபத்து ஏற்பட்டது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நாக்பூரில் ஆம்புலன்ஸ்– லாரி நேருக்கு நேர் மோதியதில் தாய்–மகன் உள்பட 4 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story