வாலிபரிடம் செல்போன், பணம் கொள்ளை: ரவுடி கைது துப்பாக்கியால் சுட்டு போலீசார் பிடித்தனர்


வாலிபரிடம் செல்போன், பணம் கொள்ளை:  ரவுடி கைது துப்பாக்கியால் சுட்டு போலீசார் பிடித்தனர்
x
தினத்தந்தி 5 Dec 2017 4:36 AM IST (Updated: 5 Dec 2017 4:36 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் வாலிபரிடம் செல்போன், பணத்தை கொள்ளையடித்த ரவுடி பிடிக்க முயன்ற போலீஸ்காரரை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்றார். உடனே அவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.

பெங்களூரு,

பெங்களூரு யஷ்வந்தபுரம் அருகே மரியப்பனபாளையா பகுதியில் நேற்று முன்தினம் இரவு அன்னியப்பா (வயது 33) என்பவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் சிலர் அவரை வழிமறித்தார்கள். பின்னர் அன்னியப்பாவை மிரட்டி, அவரிடம் இருந்த விலை உயர்ந்த செல்போன் மற்றும் ரூ.300–யை கொள்ளையடித்து சென்று விட்டார்கள். இதுகுறித்து உடனடியாக ஆர்.எம்.சி.யார்டு போலீசாருக்கு அன்னியப்பா தகவல் கொடுத்தார்.

இதையடுத்து, ஆர்.எம்.சி.யார்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் முகமது முகாரம் தலைமையிலான போலீசார் கொள்ளையர்களை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்தார்கள். அப்போது ஆர்.எம்.சி.யார்டு பகுதியில் உள்ள திருமண மண்டபத்தின் பின்புறம் கொள்ளையர்கள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே இன்ஸ்பெக்டர் முகமது முகாரம், சப்–இன்ஸ்பெக்டர் ரகு பிரசாத் மற்றும் போலீஸ்காரர்கள் அங்கு விரைந்து சென்றார்கள்.

போலீசார் வருவதை பார்த்ததும் அங்கிருந்து ஒரு வாலிபர் தப்பி ஓடினார். உடனே அவரை போலீசார் விரட்டி சென்று சுற்றி வளைத்தார்கள். பின்னர் அந்த வாலிபரை போலீஸ்காரர் ஆகாஷ் பிடிக்க முயன்றார். இந்த நிலையில், தன்னிடம் இருந்த அரிவாளால் திடீரென்று ஆகாசை, அந்த வாலிபர் தாக்கினார். இதில், அவரது கையில் பலத்தகாயம் ஏற்பட்டது. மேலும் சப்–இன்ஸ்பெக்ட்ர் ரகு பிரசாத்தையும் வாலிபர் தாக்க முயன்றார். இதனால் இன்ஸ்பெக்டர் முகமது முகாரம், வாலிபரை சரண் அடையும்படி கேட்டுக் கொண்டதுடன், தன்னிடம் இருந்த துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு எச்சரித்தார்.

ஆனால் சரண் அடைய மறுத்துவிட்ட வாலிபர், அங்கிருந்து தப்பிக்க முயன்றார். இதையடுத்து, வாலிபரை நோக்கி இன்ஸ்பெக்டர் முகமது முகாரம் துப்பாக்கியால் சுட்டார். இதில், அவரது காலில் குண்டு துளைத்தது. இதனால் அவர் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்தார். உடனே அவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தார்கள். பின்னர் அந்த வாலிபர் விக்டோரியா ஆஸ்பத்திரியிலும், போலீஸ்காரர் ஆகாஷ் தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார்கள். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீஸ் விசாரணையில், அந்த வாலிபர் பாகலகுண்டேயை சேர்ந்த அஸ்வத் (வயது 22) என்று தெரிந்தது. ரவுடியான இவர், கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. மேலும் அஸ்வத்தின் பெயர் ராஜகோபால்நகர் போலீஸ் நிலையத்தில் ரவுடி பட்டியலில் இடம் பெற்றுள்ளது. பெங்களூருவில் இரவு நேரங்களில் தனியாக செல்பவர்களை தாக்கி, அவர்களிடம் நகை, பணத்தை கொள்ளையடிப்பதை அஸ்வத், அவரது கூட்டாளிகள் தொழிலாக வைத்திருந்தார்கள். அதுபோல, நேற்று முன்தினம் இரவு அன்னிப்பாவிடம் செல்போன், பணத்தை கொள்ளையடித்து சென்றதும் தெரியவந்துள்ளது.

கைதான அஸ்வத் மீது ஆர்.எம்.சி.யார்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள அஸ்வத்தின் கூட்டாளிகளை போலீசார் தேடிவருகிறார்கள். பெங்களூருவில் நேற்று முன்தினம் பிரபல ரவுடி பழனியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.


Next Story