கர்நாடகத்தில் முழு பலத்தில் ஜனதா தளம்(எஸ்) ஆட்சி அமைக்கும் தேவேகவுடா நம்பிக்கை


கர்நாடகத்தில் முழு பலத்தில் ஜனதா தளம்(எஸ்) ஆட்சி அமைக்கும் தேவேகவுடா நம்பிக்கை
x
தினத்தந்தி 6 Dec 2017 2:30 AM IST (Updated: 6 Dec 2017 12:28 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் முழு பலத்தில் ஜனதா தளம்(எஸ்) கட்சி ஆட்சி அமைக்கும் என்று தேவேகவுடா கூறினார்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் முழு பலத்தில் ஜனதா தளம்(எஸ்) கட்சி ஆட்சி அமைக்கும் என்று தேவேகவுடா கூறினார்.

கவலைப்பட மாட்டேன்

ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடா பல்லாரி மாவட்டத்தில் நேற்று சுற்றுப்பயணம் செய்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

கர்நாடகத்தில் ஜனதா தளம்(எஸ்) கட்சியை சொந்த பலத்தில் ஆட்சி பீடத்தில் அமர வைக்க வேண்டும் என்பது எனது கனவு. இதை அரசியல் எதிரிகள் பகல் கனவு என்று சொன்னாலும் அதை பற்றி நான் கவலைப்பட மாட்டேன். தேசிய கட்சிகளான காங்கிரஸ், பா.ஜனதா ஆகியவற்றை தொலைவில் வைத்து, முழு பலத்தில் ஜனதா தளம்(எஸ்) ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

வாயை மக்கள் அடைப்பார்கள்

இதற்காக மாநிலம் முழுவதும் நான் சுற்றுப்பயணம் செய்து மக்களின் ஆதரவை கேட்கிறேன். காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா கட்சிகள் தொடர்ச்சியாக எங்கள் கட்சியின் பலத்தை குறைக்க தீவிர முயற்சி எடுத்து வருகின்றன. ஜனதா தளம்(எஸ்) கட்சி செத்துவிட்டது, அதற்கு இங்கு இடம் இல்லை, பலம் இல்லை என்று சொன்னவர்களின் வாயை மக்கள் அடைப்பார்கள்.

பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஆட்சியில், ஊழல் அதிகமாக நடைபெற்றது. மோசமான ஆட்சி நிர்வாகத்தால் மக்கள் வெறுப்படைந்து உள்ளனர். அதனால் ஜனதா தளம்(எஸ்) கட்சியை மக்கள் ஆதரிப்பார்கள். மாநில கட்சியான ஜனதா தளம்(எஸ்) கட்சியை மக்கள் ஆதரிக்க வேண்டும் என்று கைகூப்பி வணங்கி வேண்டுகிறேன்.

கர்நாடக அரசியலில் மாற்றம்

ஜனதா தளம்(எஸ்) கட்சியை ஒழிக்க யாராலும் முடியாது. இமாச்சல பிரதேசம், குஜராத் சட்டசபை தேர்தல் முடிவுக்கு பிறகு கர்நாடக அரசியலில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஜனதா பரிவார் பலப்படுத்தப்படும். இதற்கு முன்பு ஜனதா கட்சியில் இருந்த தலைவர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

இவ்வாறு தேவேகவுடா கூறினார்.

பேட்டியின்போது ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தேசிய செயல் தலைவர் பி.ஜி.ஆர்.சிந்தியா உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர். முன்னதாக பெங்களூருவில் இருந்து ரெயில் மூலம் பல்லாரிக்கு சென்ற தேவேகவுடாவுக்கு அவரது கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.


Next Story