அரசு சார்பில் ஏழைகளுக்கு 1 லட்சம் வீடுகள் ஆன்–லைனில் விண்ணப்பிக்கும் வசதியை சித்தராமையா தொடங்கி வைத்தார்


அரசு சார்பில் ஏழைகளுக்கு 1 லட்சம் வீடுகள் ஆன்–லைனில் விண்ணப்பிக்கும் வசதியை சித்தராமையா தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 6 Dec 2017 3:30 AM IST (Updated: 6 Dec 2017 12:32 AM IST)
t-max-icont-min-icon

அரசு சார்பில் ஏழை–எளிய மக்களுக்கு பெங்களூருவில் 1 லட்சம் அடுக்குமாடி வீடுகள் கட்டும் திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

பெங்களூரு,

அரசு சார்பில் ஏழை–எளிய மக்களுக்கு பெங்களூருவில் 1 லட்சம் அடுக்குமாடி வீடுகள் கட்டும் திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீடு பெறுவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் வசதியை முதல்–மந்திரி சித்தராமையா நேற்று தொடங்கி வைத்தார்.

1 லட்சம் அடுக்குமாடி வீடுகள்

கர்நாடக அரசின் வீட்டு வசதித்துறை சார்பில் சமூக–பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்காக 1 லட்சம் அடுக்குமாடி வீடுகள் கட்டி விநியோகம் செய்யப்படும் என்று சித்தராமையா ஏற்கனவே அறிவித்தார்.

பெங்களூருவில் இந்த திட்டத்திற்கு தேவையான நிலத்தை வீட்டு வசதித்துறை அதிகாரிகள் கையகப்படுத்தி உள்ளனர். இந்த நிலையில் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் வசதி தொடக்க விழா பெங்களூரு கிருஷ்ணா இல்லத்தில் நேற்று நடைபெற்றது.

விழாவில் முதல்–மந்திரி சித்தராமையா கலந்து கொண்டு, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் வீட்டு வசதித்துறை மந்திரி கிருஷ்ணப்பா, பெங்களூரு நகர வளர்ச்சித்துறை மந்திரி கே.ஜே.ஜார்ஜ், தலைமை செயலாளர் ரத்னபிரபா உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இது தொடர்பாக வீட்டு வசதித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

ஆதார் எண் கட்டாயம்

‘‘பெங்களூரு நகர மாவட்டத்தில் இருக்கும் அரசு நிலத்தில் 1 லட்சம் அடுக்குமாடி வீடுகள் கட்டப்படும். ஒரு வீட்டில் ஒரு உள் அரங்கம், படுக்கை அறை, சமையல் அறை, கழிவறை மற்றும் குளியல் அறை இடம் பெறும். இந்த திட்டத்தில் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.87 ஆயிரத்து 600–க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

இந்த திட்டத்தில் விண்ணப்பத்துடன் சாதி சான்று, வருமான சான்று, இருப்பிட சான்று இணைக்க வேண்டும். ரே‌ஷன் அட்டை எண், ஆதார் எண் கட்டாயம் வழங்க வேண்டும். மீதமுள்ள தகவல்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆன்லைன் மூலம் பெறுவார்கள். விண்ணப்ப கட்டணமாக ரூ.250 செலுத்த வேண்டும்.

பொது பிரிவுக்கு 50 சதவீதம்

ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அச்சிடப்பட்ட தாள் மூலமாக வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. இந்த 1 லட்சம் வீடுகளில் ஆதிதிராவிடருக்கு 30 சதவீதம், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினருக்கு தலா 10 சதவீதம், பொது பிரிவுக்கு 50 சதவீத வீடுகள் ஒதுக்கப்படும்.

இந்த திட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு மானியமாக ரூ.3½ லட்சமும், பிற பிரிவினருக்கு ரூ.2.70 லட்சமும் வழங்கப்படும். பெங்களூரு ஒன் மையங்கள், மாநகராட்சி வார்டு அலுவலகங்களில் விண்ணப்பங்களை தாக்கல் செய்யலாம். தனியார் கணினி மையங்கள் மூலமாகவும் விண்ணப்பங்களை அனுப்பலாம்.

ஜனவரி 5–ந் தேதி கடைசி நாள்

விண்ணப்பதாரர்களில் தகுதியானவர்கள் குலுக்கல் மூலம் தேர்ந்து எடுக்கப்படுவார்கள். விண்ணப்பிக்க அடுத்த ஆண்டு(2018) ஜனவரி 5–ந் தேதி கடைசி நாள் ஆகும். கூடுதல் தகவல்களுக்கு www.ashraya.kar.nic.in/cmonelakh என்ற இணையதள முகவரி அல்லது 080–23118888 என்ற தொலைபேசி எண்ணை தொடர்புகொள்ளலாம்.’’

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Next Story