மதுரை அரசு மருத்துவமனையில் மருத்துவக்கல்லூரி முதுநிலை மாணவர்கள் 9–வது நாளாக போராட்டம்
தமிழகத்தில் மருத்துவக்கல்லூரி முதுநிலை மாணவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரை,
தமிழகத்தில் மருத்துவக்கல்லூரி முதுநிலை மாணவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் மதுரை அரசு மருத்துவமனையில் நேற்று 9–வது நாளாக நீடித்தது. இவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மனிதச்சங்கிலி, மவுனபோராட்டம், தூக்குமேடை போராட்டம் என பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளனர். ஆனால் சுகாதாரத்துறையோ போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தநிலையில் மாணவர்கள் நேற்று மருத்துவமனையில் இருந்து அண்ணா பஸ் நிலையம் வரை பேரணியாக சென்றனர். அப்போது அவர்கள் நேராக நடந்து செல்லாமல் பின்னோக்கி சென்றனர். இந்த போராட்டத்தில் 250–க்கும் மேற்பட்ட மருத்துவக்கல்லூரி முதுநிலை மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த போராட்டத்துக்கு சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. இதுகுறித்து சங்க மாநில பொதுச்செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத் கூறும்போது, மருத்துவ தேர்வாணைய வாரியம் மூலம் நேரடியாக மருத்துவர்கள் நியமிக்கப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஐகோர்ட்டு நியமனம் குறித்து தலையிட்டு நல்ல முடிவை அறிவிக்க வேண்டும். பல நாட்களாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் முதுநிலை மாணவர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு செவிசாய்க்காமல் இருப்பது வருந்தத்தக்கது என்றார்.