வாய்க்கால்கள் தூர்வாரப்படாததால் மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்கள் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை


வாய்க்கால்கள் தூர்வாரப்படாததால் மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்கள் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 6 Dec 2017 4:15 AM IST (Updated: 6 Dec 2017 12:47 AM IST)
t-max-icont-min-icon

திருமானூர் அருகே வாய்க்கால்கள் தூர்வாரப்படாததால் மழை நீரில் நெற்பயிர்கள் மூழ்கி கிடக்கிறது. மேலும் இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருமானூர்,

அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே உள்ள கீழப்பழுவூர்-திருமழபாடி சாலை கடந்த ஆண்டு விரிவுபடுத்தப்பட்டு சாலை போடப்பட்டது. இதில் திருமானூர் அருகே பாளையப்பாடி, கீழகாவட்டாங்குறிச்சி இடையில் உள்ள சாலை விரிவுபடுத்தி போடப்பட்டதால் சாலையின் இருபுறமும் இருந்த வடிகால் வாய்க்கால்கள் அனைத்தும் தூர்ந்து போய்விட்டன. இதனால், வயலில் தேங்கும் தண்ணீர் மற்றும் மழைநீர் வடிய வாய்ப்பில்லை. இந்நிலையில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்த மழையால் தண்ணீர் வடிய வழியில்லாமல் அப்படியே நின்று விட்டது. இதனால், அருகேயுள்ள வயல்களில் தண்ணீர் தேங்கி தற்போது நடவு செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி உள்ளன.

மேலும், சில வயல்களில் நடவுக்காக போடப்பட்டிருந்த நாற்று முடிச்சுகளும், தண்ணீரில் மூழ்கி அழுகி காணப்படுகிறது. சாலை போட ப்பட்ட போதே சாலையோரத்தில் உள்ள வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டிருந்தால் தற்போது பெய்த தொடர் மழையில் தண்ணீர் தேங்காமல் சென்றிருக்கும். மேலும், விவசாய நிலங்களிலும் தண்ணீர் தேங்காமல் பாதிப்பு ஏற்படாமலும் இருந்திருக்கும். எனவே, விவசாயிகளின் வயல்களுக்கு பாதிப்பு ஏற்படா வண்ணம் இருக்கவும், மழை தண்ணீர் வடிந்து ஓடவும் வடிகால் வாய்க்கால்களை தூர்வார சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story