தேவதானப்பட்டி அருகே ஆக்கிரமிப்பை அகற்றியபோது மயங்கி விழுந்த தொழிலாளி சாவு


தேவதானப்பட்டி அருகே ஆக்கிரமிப்பை அகற்றியபோது மயங்கி விழுந்த தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 6 Dec 2017 4:15 AM IST (Updated: 6 Dec 2017 12:56 AM IST)
t-max-icont-min-icon

தேவதானப்பட்டி அருகே ஆக்கிரமிப்பை அகற்றியபோது மயங்கி விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார். இதையொட்டி அவருடைய உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேவதானப்பட்டி,

தேவதானப்பட்டி அருகே உள்ள கல்லுப்பட்டியில் நேற்று ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடந்தது. இதில் பெரியகுளம் வட்டார வளர்ச்சி அதிகாரி சேதுகுமார் முன்னிலையில் ஊராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு இருந்தனர். அப்போது காமாட்சி (வயது 70) என்பவர் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி இருப்பது தெரிய வந்தது.

இதையொட்டி அந்த ஆக்கிரமிப்பை இடித்து அகற்றும் பணிகள் நடந்தது. இதைப்பார்த்ததும் காமாட்சி திடீரென்று மயங்கி விழுந்து இறந்தார்.

இதையொட்டி அதிகாரிகள் தள்ளி விட்டதால் தான் காமாட்சி இறந்து விட்டதாக கூறி அவருடைய உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் பெரியகுளம் ஆர்.டி.ஓ. ஆனந்தி, போலீஸ் துணை சூப்பிரண்டு வினோஜி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அதன்பின்னர் காமாட்சியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 19 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதேபோன்று தேவதானப்பட்டி அருகே உள்ள சில்வார்பட்டியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று அதிகாரிகள் அறிவித்து இருந்தனர். இதையொட்டி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து நேற்று ஆக்கிரமிப்புகளை அகற்றினார்கள்.


Next Story