பாசனத்துக்காக வைகை அணையில் தண்ணீர் திறப்பு
குடிநீர், பாசனத்துக்காக வைகை அணையில் இருந்து நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது.
ஆண்டிப்பட்டி,
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து பெரியாறு பாசன பகுதிக்கும், மதுரை திருமங்கலம் பகுதி பாசனத்துக்கும் வைகை அணையில் இருந்து பாசன கால்வாய் மூலம் தண்ணீர் திறக்க முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். மேலும் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட ஆயக்கட்டு பகுதியின் குடிநீர் தேவைக்காக வைகை அணையில் இருந்து ஆற்றுப்படுகை மூலமாக தண்ணீர் திறக்கவும் உத்தரவிட்டார்.
இதனையடுத்து வைகை அணையில் இருந்து நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர்கள் தனபாலன், மலையரசன் ஆகியோர் தண்ணீரை திறந்து வைத்தனர். வைகை அணையின் சிறிய மதகுகள் வழியாக வினாடிக்கு 900 கனஅடி வீதம் பாசனத்திற்கு கால்வாய் மூலம் தண்ணீர் திறக்கப்பட்டது.
கால்வாயில் திறக்கப்படும் தண்ணீரின் மூலம் பெரியாறு பாசனப்பகுதியில் உள்ள ஒரு போக பாசன நிலங்கள் 85 ஆயிரத்து 563 ஏக்கரும், திருமங்கலம் பிரதான கால்வாயின் கீழ் உள்ள ஒரு போக பாசன நிலங்கள் 19 ஆயிரத்து 439 ஏக்கரும் சேர்த்து மொத்தம் 1,05,002 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். 5–ந் தேதி முதல் 28–ந் தேதி வரையில் அணையின் நீர்இருப்பு, நீர்வரத்தை பொறுத்து தண்ணீர் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள வைகை பூர்வீக பாசன பகுதிகளுக்கு குடிநீருக்காக வைகை அணை பிரதான மதகுகள் வழியாக வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் ஆற்றுப்படுகையில் திறக்கப்பட்டது. 5–ந் தேதி முதல் 10–ந் தேதி வரை 1,071.36 மில்லியன் கனஅடி தண்ணீரும், 12–ந் தேதி முதல் 15–ந்தேதி வரை 457.92 மில்லியன் கனஅடி தண்ணீரும் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்கள் சுப்பிரமணியன், வெங்கடகிருஷ்ணன், வைகை அணை உதவி செயற்பொறியாளர் செல்வம், பொறியாளர்கள் குபேந்திரன், ஆனந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மதுரை மாவட்ட விவசாயத் தேவைக்காக வைகை அணையில் இருந்து ஏற்கனவே வினாடிக்கு 700 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதுதவிர மதுரை மாநகர குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 60 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று கூடுதலாக வினாடிக்கு 3900 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டதால், அணையில் இருந்து மொத்தம் வினாடிக்கு 4,660 தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அதிகமாக தண்ணீர் திறக்கப்பட்டதால் வைகை அணை இருகரைகளை இணைக்கும் தரைப்பாலத்தை மூழ்கியபடி தண்ணீர் சென்றது.
நேற்று காலை 6 மணி நிலவரப்படி 71 உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 60.01 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1941 கனஅடி தண்ணீர் வரத்து உள்ள நிலையில், அணையில் இருந்து பாசனத்திற்கும், குடிநீர் தேவைக்கும் சேர்த்து வினாடிக்கு 4,660 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. அணையின் மொத்த நீர்இருப்பு 3,601 மில்லியன்கனஅடியாக காணப்பட்டது.