ஆபத்தான முறையில் செல்லும் உயர் அழுத்த மின்சார கேபிள்கள்
ஆபத்தான முறையில் செல்லும் உயர் அழுத்த மின்சார கேபிள்கள் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆலந்தூர்,
சென்னையை அடுத்த ஆலந்தூர் புதுப்பேட்டை தெருவில் உயர் அழுத்த மின்சார கேபிள்கள் பூமிக்கு அடியில் புதைக்கப்படாமல் சாலையோரம் உள்ள நடைபாதை மீது செல்லும் வகையில் உள்ளது. இந்த மின்சார கேபிள்கள் பழுதடைந்து அதன் மீது பிளாஸ்திரிகளால் ஒட்டு போடப்பட்ட நிலையில் காணப்படுகிறது.
மழை பெய்யும் போது அந்த சாலையில் தேங்கி நிற்கும் தண்ணீரில் மின்சார கேபிள்களில் உள்ள பிளாஸ்திரி ஒட்டுகள் பிரிந்து மின் கசிவு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதனால் நடைபாதை மற்றும் சாலையில் நடந்து செல்பவர்களை மின்சாரம் தாக்கி, உயிர் பலி ஏற்படும் அபாயம் உள்ளது. அருகிலேயே மழலையர் பள்ளிக்கூடமும் இயங்கி வருகிறது.
எனவே விபரீதம் ஏற்படுவதற்கு முன்பாக உடனடியாக ஆபத்தான நிலையில் உள்ள இந்த உயர் அழுத்த மின்சார கேபிள்களை பூமிக்கு அடியில் புதைக்கவும், பழுதடைந்த கேபிள்களை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின்வாரிய அதிகாரிகளுக்கு அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.