காணாமல் போனவர் பிணமாக மீட்பு: தொழிலாளியை கொலை செய்து சாக்குமூட்டையில் கட்டி வீசிய 3 பேர் கைது


காணாமல் போனவர் பிணமாக மீட்பு: தொழிலாளியை கொலை செய்து சாக்குமூட்டையில் கட்டி வீசிய 3 பேர் கைது
x
தினத்தந்தி 6 Dec 2017 4:15 AM IST (Updated: 6 Dec 2017 1:09 AM IST)
t-max-icont-min-icon

காணாமல் போன தொழிலாளி பிணமாக மீட்கப்பட்டார். அவரை கொலை செய்து சாக்குமூட்டையில் கட்டி வீசிய பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சாந்தாம்பாறை,

சாந்தாம்பாறை தொட்டிக்கானம் பகுதியை சேர்ந்தவர் ராஜீவ் (வயது 32). கூலித்தொழிலாளி. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்ற ராஜீவ், பின்னர் வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் உறவினர்கள் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து ராஜீவின் தாயார் கவுசல்யா சாந்தாம்பாறை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் ராஜீவை தேடினர்.

ராஜீவ் வேலை பார்த்த தோட்ட உரிமையாளரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் ராஜீவ் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து கவுசல்யா காணாமல் போன தனது மகனை கண்டுபிடித்து தருமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வேணுகோபாலிடம் மனு கொடுத்தார்.

இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் குமுளி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ஜோபிதாமஸ் தலைமையில் 7 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள் ராஜீவை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். ராஜீவ் உடன் வேலை பார்த்த தொழிலாளர்களான மாங்காய்தொட்டி பகுதியை சேர்ந்த கோபி (48), தொட்டிகானம் பகுதியை சேர்ந்த பாபு (49) மற்றும் எமிலி (40) ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து அவர்களிடம், போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில், அவர்கள் ராஜீவை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். இதுகுறித்து அவர்கள் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் கூறியதாவது:–

கொலை செய்யப்பட்ட ராஜீவின் செல்போனை கைது செய்யப்பட்ட பாபு மற்றும் எமிலி ஆகியோர் திருடியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ராஜீவ், உடன் வேலை பார்க்கும் கோபியிடம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பாபு மற்றும் எமிலியிடம் சென்று கோபி கேட்டுள்ளார். அப்போது 2 பேரும் தாங்கள் செல்போனை திருடவில்லை என்று கூறியுள்ளனர்.

இதனால் ராஜீவ், மீது கோபிக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து கோபி மற்றும் பாபு, எமிலி ஆகிய 3 பேரும் சேர்ந்து செல்போனை திருடியதாக ஏமாற்றுகிறாயா? என்று கூறி ராஜீவிடம் சென்று தகராறில் ஈடுபட்டனர். தகராறு முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த 3 பேரும் சேர்ந்து ராஜீவை மண்வெட்டியால் தாக்கியுள்ளனர். மேலும் கீழே விழுந்த அவரை கல்லை தலையில் போட்டுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே ராஜீவ் இறந்துள்ளார்.

அவர் இறந்ததை உறுதி செய்த அவர்கள் உடலை சாக்குமூட்டையில் கட்டி தமிழக– கேரள வனப்பகுதியில் உள்ள ராஜாபாறைமெட்டு பகுதியில் கொண்டு போய் பள்ளத்தில் வீசி உள்ளனர். பின்னர் ஒன்று தெரியாதது போல் வழக்கம்போல் இருந்துள்ளனர்.

இவ்வாறு போலீசார் கூறினர்.

இதற்கிடையில் அவர்கள் கூறிய இடத்துக்கு சென்ற போலீசார் ராஜீவின் உடலை மீட்டனர். ராஜீவின் உடல் அழுகிய நிலையில் இருந்தது. அவர் அணிந்திருந்த ஆடையை வைத்து உறவினர்கள் ராஜீவ்தான் என்று அடையாளம் காட்டினர். இதையடுத்து அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்காக கோட்டயம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் கோபி சொத்துக்காக தனது தந்தையை கொலை செய்ய முயன்ற வழக்கு உள்ளது. அதுமட்டுமின்றி பல்வேறு திருட்டு வழக்குகளும் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் எமிலி உள்பட 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story