சென்னை வியாசர்பாடியில் பணத்தை ஏமாற்றியதால் ஆள் கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் கைது


சென்னை வியாசர்பாடியில் பணத்தை ஏமாற்றியதால் ஆள் கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் கைது
x
தினத்தந்தி 6 Dec 2017 4:45 AM IST (Updated: 6 Dec 2017 1:19 AM IST)
t-max-icont-min-icon

தங்களது பணத்தை ஏமாற்றி எடுத்துச்சென்றவரை கடத்திய ,,,3 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெரம்பூர்,

தங்களது பணத்தை ஏமாற்றி எடுத்துச்சென்றவரை கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை வியாசர்பாடி, எம்.கே.பி. நகர், 18-வது தெருவை சேர்ந்தவர் முகமது பீலிசா (வயது 29). இவர் மண்ணடியில் அப்பகுதியை சேர்ந்த தனது நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து தொழில் செய்துவந்தார். ஒரு ஆண்டுக்கு முன் முகமது பீலிசா நண்பர்களின் 3 லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு தலைமறைவாகிவிட்டார் என்றும், அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஒரு வருடம் கழித்து அவர் எம்.கே.பி.நகரில் உள்ள தனது தாய் வீட்டுக்கு வந்தார். முகமது பீலிசா வந்துள்ள தகவல் அறிந்த பணத்தை இழந்த பழைய நண்பர்களான மண்ணடியை சேர்ந்த அப்துல் ரசித்(27), இருக்சான்(23), அஜின்(23) ஆகிய மூவரும் நேற்று முன்தினம் இரவு எம்.கே.பி.நகர் வந்தனர். அங்கு இருந்த முகமது பீலிசாவிடம் பணத்தை கேட்டு காரில் கடத்திச் சென்றனர்.

இதுகுறித்து நேற்று காலை முகமது பீலிசாவின் தாய் செரினா எம்.கே.பி.நகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் முகமது பீலிசா ஏழுகிணறு அருகே உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த முகமது பீலிசாவை மீட்டனர். போலீசார் ஆள் கடத்தலில் ஈடுபட்ட 3 பேரையும் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஒரு வருடத்திற்கு முன்பு தங்களை ஏமாற்றி 3 லட்சம் ரூபாயை எடுத்துச் சென்றதை கேட்டு முகமது பீலிசாவை கடத்தியதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 3 பேரையும் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

Next Story