ஊட்டி படகு இல்லத்தில் விபரீத விளையாட்டில் ஈடுபட்ட வாலிபர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்


ஊட்டி படகு இல்லத்தில் விபரீத விளையாட்டில் ஈடுபட்ட வாலிபர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
x
தினத்தந்தி 6 Dec 2017 4:00 AM IST (Updated: 6 Dec 2017 1:20 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி படகு இல்லத்தில் விபரீத விளையாட்டில் வாலிபர் ஒருவர் ஈடுபட்டார். இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் மலை மாவட்டம் என்பதால், இங்கு ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன. ஊட்டியில் அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா மலைசிகரம், படகு இல்லம் ஆகிய சுற்றுலா தலங்களுக்கு உள்நாடுகள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஆண்டுதோறும் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக வார விடுமுறை நாட்களில் சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும்.

இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தையொட்டி, ஊட்டி படகு இல்லத்துக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். அவர்கள் துடுப்பு படகு, மிதி படகு மற்றும் மோட்டார் படகில் சவாரி செய்து மகிழ்ந்தனர். அப்போது சுற்றுலா வந்திருந்த 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் ஊட்டி படகு இல்லத்தில் திடீரென ஸ்கேட்டிங் விளையாட்டில் ஈடுபட்டார். வேகமாக வந்து சுழன்றபடிபடி மீது ஏறினார். அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த இளைஞர் தடுமாறி கீழே விழும் நிலை ஏற்பட்டது. ஆனால், அதிர்ஷ்டவசமாக அவர் கீழே விழவில்லை. எந்த காயமும் ஏற்படவில்லை. இதனை அங்கிருந்த சுற்றுலா பயணிகள் மெய்சிலிர்த்தபடி பார்த்தனர்.

மேலும் சுற்றுலா பயணிகள் சிலர் தங்களது செல்போன்களில் புகைப்படம் எடுத்தனர். ஊட்டி படகு இல்லத்தில் இளைஞர் இந்த விபரீத விளையாட்டில் ஈடுபட்ட போது, சற்று தடுமாறினாலும் ஏரிக்குள் தலைக்குப்புற விழுந்து உயிருக்கே ஆபத்து ஏற்படும் நிலை இருந்தது.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறும் போது, ஸ்கேட்டிங் விளையாடுவதற்கு என்று ஊட்டியில் தனி இடம் உள்ளது. எனவே, சுற்றுலா தலங்களில் இதுபோன்ற ஆபத்தான விபரீத விளையாட்டுகளில் ஈடுபடுபவர்களை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்களில் அனுமதியை மீறி ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற விபரீத விளையாட்டு மற்றவர்களையும் காயப்படுத்தி விடும் என்றனர்.


Next Story