பாதை வசதி கேட்டு அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியல் 32 பேர் மீது வழக்கு


பாதை வசதி கேட்டு அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியல் 32 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 6 Dec 2017 4:30 AM IST (Updated: 6 Dec 2017 1:31 AM IST)
t-max-icont-min-icon

மொரப்பூர் அருகே பாதை வசதி கேட்டு பொதுமக்கள் அரசு பஸ்சை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக பெண்கள் உள்பட 32 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மொரப்பூர்,

மொரப்பூர் அருகே உள்ள தாசிரஅள்ளி ஊராட்சி ஆவலப்பட்டி அருந்ததியர் காலனியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு பாதை வசதி இல்லை. இதுகுறித்து பொதுமக்கள் மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் பாதை வசதி செய்து கொடுக்கப்படவில்லை கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பாதை வசதி கேட்டு மொரப்பூர்- தாசிரஅள்ளி, சிந்தல்பாடி 3 ரோடு பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ்சை அவர்கள் சிறை பிடித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த அரூர் தாசில்தார் பரமேஸ்வரி, வருவாய் ஆய்வாளர் ரஞ்சித்குமார், கிராம நிர்வாக அலுவலர் சசிக்குமார் மற்றும் மொரப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கந்தவேல் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பாதை வசதி செய்து தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

போக்குவரத்துக்கு இடையூறாக சாலை மறியல் செய்ததாக 15 பெண்கள் உள்பட மொத்தம் 32 பேர் மீது மொரப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

Next Story