மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆற்றில் மூழ்கி என்ஜினீயரிங் மாணவர்கள் 2 பேர் பலி


மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆற்றில் மூழ்கி என்ஜினீயரிங் மாணவர்கள் 2 பேர் பலி
x
தினத்தந்தி 6 Dec 2017 4:00 AM IST (Updated: 6 Dec 2017 1:37 AM IST)
t-max-icont-min-icon

மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆற்றில் மூழ்கி என்ஜினீயரிங் மாணவர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

மேட்டுப்பாளையம்,

திருப்பூர் மாவட்டம் கருவலூரை அடுத்த அரசம்பாளையத்தை சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி, விவசாயி. அவரது மகன் குகன் (வயது 21). இவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3–ம் ஆண்டு படித்து வந்தார்.

அன்னூர் அருகே கஞ்சப்பள்ளியை சேர்ந்தவர் பொன்னுசாமி, மின்வாரிய ஊழியர். இவரது மகன் கோகுல்ராஜ் (21). கோவில்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3–ம் ஆண்டு படித்து வந்தார். குகனும், கோகுல்ராஜூம் நெருங்கிய நண்பர்கள்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் குகன், தனது நண்பரான கோகுல்ராஜின் வீட்டுக்கு சென்றார். பின்னர் 2 பேரும் அன்னூரில் உள்ள தாசில்தார் அலுவலகத்துக்கு சென்றனர். அங்கிருந்து சிறுமுகை அருகே பழத்தோட்டத்துக்கு சென்றுவிட்டு, கிச்சகத்தூர் பாலம் அருகே பவானி ஆற்றுக்கு மாலை 3 மணி அளவில் குளிக்க சென்றனர்.

அப்போது திடீரென ஆழமான பகுதிக்கு சென்ற 2 பேரும் நீரில் மூழ்கினர். சிறிது நேரத்திலேயே மூச்சுத்திணறி அவர்கள், பரிதாபமாக உயிரிழந்தனர். வெகுநேரம் ஆகியும் இருவரும் வீட்டுக்கு செல்லாததால் பெற்றோர் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் மாணவர்கள் 2 பேரும் தண்ணீரில் மூழ்கி இறந்ததை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் சிறுமுகை போலீசார் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு நேற்று காலை தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையில் போலீசாரும், தீயணைப்பு நிலைய அலுவலர் முருகேசன் தலைமையில் மீட்பு படையினரும் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

பின்னர் பரிசல்காரர்கள் உதவியுடன், கல்லூரி மாணவர்கள் உடலை தேடும் பணி நடந்தது. நேற்று காலை 7 மணிக்கு குகனின் உடலை மீட்பு படையினர் மீட்டனர். கோகுல்ராஜின் உடலை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மீட்கப்பட்ட குகனின் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுத காட்சி நெஞ்சை உருக்குவதாக இருந்தது. மேலும் நீரில் மூழ்கி இறந்த கோகுல்ராஜின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆற்றின் கரையோரத்தில் கண்ணீர் சிந்தியபடி காத்திருந்தது பரிதாபமாக இருந்தது.

மீட்கப்பட்ட குகனின் உடலை பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story