ஈரோட்டில் பிரிண்டிங் பட்டறை தொடங்கி ரூ.1¼ கோடி மோசடி செய்த தந்தை –மகன் கைது
ஈரோட்டில் பிரிண்டிங் பட்டறை தொடங்கி ரூ.1¼ கோடி மோசடி செய்த தந்தை –மகனை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு
ஈரோடு வில்லரசம்பட்டி உதயம் கார்டன் பகுதியை சேர்ந்தவர் சங்கரநாராயணன் (வயது 57). இவர் கடந்த 2012–ம் ஆண்டு ஈரோடு மூலப்பட்டறையை சேர்ந்த விஜயகுமார் (57) மற்றும் அவருடைய மகன் அஜய் சந்துரு (28) ஆகியோருடன் சேர்ந்து பிரிண்டிங் பட்டறை தொடங்க முடிவு செய்தார்.
அதற்காக சங்கரநாராயணன் ரூ.70 லட்சத்து 11 ஆயிரத்து 300–ம், விஜயகுமார், அஜய்சந்துரு ஆகியோர் ரூ.70 லட்சமும் முதலீடு செய்தனர். அதைத்தொடர்ந்து ஈரோடு கொங்கம்பாளையம் பகுதியில் பிரிண்டிங் பட்டறையை தொடங்கினார்கள்.
கடந்த 2012–ம் ஆண்டு முதல் இந்த ஆண்டு வரை வரவு –செலவு கணக்குகளை விஜயகுமார் மற்றும் அஜய்சந்துரு, சங்கரநாராயணனிடம் காண்பிக்கவில்லை. இதனால் சங்கரநாராயணன் பிரிண்டிங் பட்டறைக்கு நேரில் சென்று வரவு –செலவு கணக்குகளை பார்த்தார். அப்போது ரூ.1 கோடியே 25 லட்சம் வரை குறைந்தது. அதனால் சங்கரநாராயணன் இதுகுறித்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமாரிடம் புகார் செய்தார்.
அவர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் விஜயகுமாரும் அவருடைய மகன் அஜய்சந்துரும் சேர்ந்து பிரிண்டிங் பட்டறையில் ரூ.1 கோடியே 25 லட்சம் வரை மோசடி செய்தது தெரியவந்தது. அதனால் போலீசார் விஜயகுமார் மற்றும் அஜய்சந்துருவை நேற்று கைது செய்தனர்.