நாகர்கோவிலில் பரிதாபம் புயலால் சாய்ந்த மின்கம்பத்தை சீரமைத்த ஊழியர் மின்சாரம் பாய்ந்து சாவு


நாகர்கோவிலில் பரிதாபம் புயலால் சாய்ந்த மின்கம்பத்தை சீரமைத்த ஊழியர் மின்சாரம் பாய்ந்து சாவு
x
தினத்தந்தி 6 Dec 2017 4:30 AM IST (Updated: 6 Dec 2017 2:22 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் ‘ஒகி‘ புயலால் சாய்ந்த மின் கம்பத்தை சீரமைத்த போது மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் ‘ஒகி‘ புயலால் ஏராளமான மின்கம்பங்கள் சாய்ந்ததால் மின்சாரம் தடைபட்டது. தற்போது பல்வேறு இடங்களில் படிப்படியாக மின் வினியோகம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக மின்வாரிய ஊழியர்கள் தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் நாகர்கோவில் வல்லன்குமாரன்விளை பகுதியில் புயலால் சாய்ந்த மின் கம்பத்தை சீரமைக்கும் பணி நடந்தது.

இந்த பணியில் வல்லன்குமாரன்விளை மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றும் ஈத்தாமொழி பகுதியை சேர்ந்த செல்வராமன் (வயது 47) என்பவரும் ஈடுபட்டு இருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக செல்வராமன் மீது மின்சாரம் பாய்ந்ததாக கூறப்படுகிறது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சக ஊழியர்கள் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி செல்வராமன் பரிதாபமாக இறந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக நாகர்கோவில் கோட்டார் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story