குமரி மாவட்டத்தில் நிவாரண பணிகளுக்கு மத்திய அரசு ரூ.500 கோடி வழங்க வேண்டும் திருநாவுக்கரசர் பேட்டி


குமரி மாவட்டத்தில் நிவாரண பணிகளுக்கு மத்திய அரசு ரூ.500 கோடி வழங்க வேண்டும் திருநாவுக்கரசர் பேட்டி
x
தினத்தந்தி 6 Dec 2017 4:30 AM IST (Updated: 6 Dec 2017 2:22 AM IST)
t-max-icont-min-icon

ஒகி புயலால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்டத்தில் நிவாரண பணிகளுக்கு மத்திய அரசு ரூ.500 கோடி வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் மாநில தலைவர் திருநாவுக்கரசர் கூறினார்.

களியக்காவிளை,

ஒகி புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிடுவதற்காக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நேற்று குமரி மாவட்டத்திற்கு வந்தார். சென்னையில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்த அவர், அங்கிருந்து கார் மூலம் குமரி மாவட்டம் குழித்துறை அருகே உள்ள குறுமத்தூர் பகுதிக்கு சென்றார். அங்கு புயல் மழையால் சேதமடைந்த ரப்பர் மரங்களை பார்வையிட்டு சேத விவரங்கள் குறித்து கேட்டறிந்தார். மேலும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார்.

பின்னர், அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புயல், மழையால் குமரி மாவட்டம் வரலாறு காணாத அளவு பாதிக்கப்பட்டுள்ளது. நெல், வாழை, ரப்பர் போன்ற பயிர்கள் பெருமளவில் சேதமடைந்துள்ளன. வாழை விவசாயத்தை பொறுத்தமட்டில் ஒரு ஏக்கர் நிலத்திற்கு ரூ.2 லட்சம் வரை செலவாகும். ஆனால், தமிழக அரசு ஒரு ஏக்கருக்கு ரூ.14 ஆயிரம் மட்டுமே நிவாரண தொகையாக அறிவித்துள்ளது. இந்த தொகை போதுமானதாக இல்லை.

குமரி மாவட்டத்தின் பொருளாதாரத்தை நிலைநிறுத்தும் ரப்பர் பயிருக்கு எந்த நிவாரணமும் அறிவிக்கப்படவில்லை. நான் பயணம் செய்து வந்த இடங்களில் சாலையோரம் பல மின்கம்பங்கள் முறிந்து கிடப்பதை பார்த்தேன். இதனால், அப்பகுதியில் மின்சாரம் தடைப்பட்டு பல பகுதிகள் இருளில் மூழ்கி உள்ளதாக சொன்னார்கள்.

குடிநீர் தட்டுப்பாடும் பல இடங்களில் ஏற்பட்டுள்ளது. இவற்றை விரைவில் சீரமைக்க வேண்டும். இயற்கை சீற்றத்தால் இறந்தவர்களின் விவரங்களை முழுமையாக சேகரித்து நிவாரணம் வழங்க வேண்டும்.

ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ஆயிரக்கணக்கான மீனவர்களின் விவரம் இன்னும் தெரியவில்லை. பலர் இறந்து உடல்கள் கரை ஒதுங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பல மீனவர்கள் வேறு மாநிலங்களில் பாதுகாப்பாக கரை ஒதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது. ஒவ்வொருவரின் உயிரின் முக்கியத்துவத்தை அறிந்து அவர்களை தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்.

அதிக அளவிலான கப்பல் கள், படகுகளை பயன்படுத்தி மீனவர்களை தேடிக் கண்டுபிடிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதுவரை பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட வரவில்லை. இது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது.

கடலில் மீன்பிடிக்க சென்று புயலின் தாக்கத்தால் மரணம் அடைந்தவர்களுக்கு கேரள அரசு ரூ.10 லட்சம் உதவித்தொகை வழங்கி வருகிறது. ஆனால், தமிழக அரசோ ரூ.4 லட்சம் அறிவித்து உள்ளது. கேரள அரசு வழங்குவதுபோல் தமிழக அரசும் உதவித்தொகையாக ரூ.10 லட்சமாக வழங்க வேண்டும். குமரி மாவட்ட நிவாரண பணிக்காக ரூ.25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகை போதாது.

குமரி மாவட்டத்தில் ஏற்பட்ட பாதிப்பை தேசிய பேரிடராக அறிவித்து மத்திய அரசு ரூ.500 கோடி வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது எம்.எல்.ஏ.க்கள் விஜயதரணி, ராஜேஷ்குமார், பிரின்ஸ் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் டாக்டர் சாமுவேல் ஜார்ஜ், ரவிசங்கர், ஜோசப் தயாசிங், லைலா உள்பட பலர் இருந்தனர்.

இதை தொடர்ந்து குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று சேதங்களை திருநாவுக்கரசர் பார்வையிட்டார்.

இதைத்தொடர்ந்து குளச்சல் வந்த அவர், அங்கு உள்ள மீன்பிடி துறைமுகத்தில் புயலால் சேதமடைந்த படகுகளை பார்வையிட் டார். மேலும், கடலுக்கு சென்று கரை திரும்பாத மீனவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர், குளச்சல் பங்குத்தந்தை எட்வின் வின்சென்டை சந்தித்து காணாமல் போன மீனவர்கள் குறித்த விவரங்கள் கேட்டறிந்தார்.

தொடர்ந்து முட்டம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட்டார். சுசீந்திரம், மணக்குடி ஆகிய இடங்களில் சூறாவளி காற்றினால் ஏற்பட்ட சேதங்களையும், நாகர்கோவில் வடலிவிளையில் கனமழையால் இடிந்த வீட்டையும் பார்வையிட்டு பொதுமக்களுக்கு ஆறுதல் கூறினார்.

பின்னர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்த திருநாவுக்கரசர், கலெக்டர் சஜ்ஜன்சிங் சவானை சந்தித்து மாவட்டத்தில் புயல் மற்றும் கனமழையால் ஏற்பட்ட பொருட் சேதங்கள், பயிர் சேதங்கள், மீனவர்கள் பிரச்சினை உள்ளிட்டவை குறித்து விளக்கி பேசினார். பிறகு ஆசாரிபள்ளம் சாலையில் உள்ள பிஷப்இல்லம் சென்று, கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசையை சந்தித்து விவரங்கள் கேட்டறிந்தார். அதன்பின் திருவனந்தபுரத்துக்கு அவர் காரில் புறப்பட்டு சென்றார். 

Next Story