‘ஒகி’ புயல் எதிரொலி மும்பையில் அடைமழை இயல்பு வாழ்க்கை பாதிப்பு
‘ஒகி’ புயல் எதிரொலியாக மும்பையில் நேற்று அடைமழை பெய்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.
மும்பை,
‘ஒகி’ புயல் எதிரொலியாக மும்பையில் நேற்று அடைமழை பெய்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.
‘ஒகி’ புயல்தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் கேரளாவை உலுக்கிய ‘ஒகி’ புயல் வங்கக்கடலில் இருந்து வடமேற்காக நகர்ந்து குஜராத் நோக்கி திரும்பி உள்ளது.
அந்த புயல் வலுவிழந்து நள்ளிரவிலோ அல்லது இன்று(புதன்கிழமை) காலையிலோ சூரத் அருகே கரையை கடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக ‘ஒகி‘ புயல் நகர்வு காரணமாக மராட்டியத்தில் கனமழை பெய்யும் என மும்பை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
அதன்படி நேற்றுமுன்தினம் மாலையில் இருந்து மும்பை உள்பட மராட்டியத்தின் கடலோர மாவட்டங்களில் பரவலாக நல்ல மழை பெய்தது.
இயல்பு வாழ்க்கை பாதிப்பு‘ஒகி’ புயல் மற்றும் மழை காரணமாக மும்பை உள்பட 8 மாவட்டங்களுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது. மீனவர்கள் கடலுக்குள் செல்லவேண்டாம் என எச்சரிக்கப்பட்டனர்.
இரவு முழுவதும் மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும் இந்த மழை நீடித்தது. மும்பை, தானே, நவிமும்பையில் விடாமல் பெய்து கொண்டிருந்த இந்த மழை நேற்று அடைமழையாக கொட்டியது.
அடைமழை காரணமாக மும்பையில் மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு உணரப்பட்டது. பலரும் வீட்டிற்குள்ளேயே முடங்கி இருந்தனர்.
போக்குவரத்து நெரிசல்மேற்கு விரைவு சாலையில் நேற்று காலை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் ஆமை வேகத்தில் ஊர்ந்தபடி சென்றன.
ஒரு சில இடங்களில் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்றதையும் காண முடிந்தது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள்.
அதே நேரத்தில் மும்பைவாசிகளின் போக்குவரத்துக்கு உயிர்நாடியான மின்சார ரெயில் சேவையில் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. வழக்கம் போல மின்சார ரெயில்கள் இயங்கின.
மழையின் காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கியதால் ரெயில்களில் நேற்று வழக்கத்தை விட கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. மதிய நேரங்களில் ரெயில்கள் கூட்ட நெரிசல் இன்றி சென்றன.
மக்கள் பரிதவிப்புசட்டமேதை அம்பேத்கரின் நினைவு தினம் நாளை அனுசரிக்கப்பட உள்ள நிலையில், தாதர் சைத்ய பூமியில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இருந்து ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டிருந்தனர்.
அவர்கள் தங்குவதற்காக சிவாஜி பார்க் மைதானத்தில் பந்தல்கள் போடப்பட்டு உள்ளன. கொட்டி தீர்த்த அடைமழை காரணமாக அந்த பந்தல்கள் ஒழுகி தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறின. இதனால் அங்கு தங்கியிருந்தவர்கள் மழையில் நனைந்தபடி பரிதவித்தனர்.
உடனடியாக அவர்கள் மாநகராட்சி பள்ளிகளில் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து பெஸ்ட் பஸ்கள் மூலம் அவர்கள் பள்ளிகளுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
மழை விவரம்இதுதவிர சைத்ய பூமி நோக்கி வந்தவர்கள் பலரும் கடும் சிரமத்திற்குள்ளாகினர். அவர்கள் ரெயில் நிலையங்கள், ஆகாய நடைபாதைகள், மேம்பாலங்களின் அடிப்பகுதிகளில் தஞ்சம் அடைந்து உள்ளனர். மேலும் மழையின் காரணமாக மக்கள் வரத்து இன்றி சைத்ய பூமி வெறிச்சோடி காணப்பட்டது. ‘ஒகி’ புயல் காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் பொதுமக்கள் கடற்கரைகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என மாநகராட்சி எச்சரிக்கை விடுத்தது.
மும்பையில் நேற்று முன்தினம் மாலை 5.30 மணி முதல் நேற்று காலை 8.30 மணி வரையிலான 13 மணி நேரத்தில் சாந்தாகுருசில் 22 மி.மீ, கொலபாவில் 22.6 மி.மீ. மழை பதிவானது. கடந்த 10 ஆண்டுகளுக்கு பின் டிசம்பரில் பதிவான அதிகபட்ச மழைப்பொழிவு இதுவாகும். மராட்டியத்தின் மற்ற இடங்களில் பெய்த மழை அளவு விவரம் வருமாறு:–
அலிபாக் 21 மி.மீ., தானே 14 மி.மீ., தகானு 13 மி.மீ., மாதேரான் 14 மி.மீ., புனே 3 மி.மீ., மகாபலேஸ்வர் 4 மி.மீ., சத்தாரா 4 மி.மீ.
இதற்கிடையே மும்பையில் இன்றும் மழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.