விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 6 Dec 2017 4:15 AM IST (Updated: 6 Dec 2017 2:50 AM IST)
t-max-icont-min-icon

டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யக்கோரி விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

விருத்தாசலம்,

நெய்வேலி அருகே உள்ள மந்தாரக்குப்பத்தில் கடலூர்-விருத்தாசலம் தேசிய நெடுஞ்சாலை அருகே டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த கடைக்கு மதுகுடிக்க வரும் குடிபிரியர்கள் போதை தலைக்கேறியதும், தகராறில் ஈடுபடுகின்றனர். மேலும் அவ்வழியாக செல்லும் பெண்களை அவர்கள் கேலி கிண்டல் செய்வதால் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாவதோடு, சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் நிலை உள்ளது. இந்த கடையை இடமாற்றம் செய்யக்கோரி அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சியினர், நேற்று விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள் டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யக்கோரி கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி அறிந்த விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பேச்சுவார்த்தை நடத்த கோட்டாட்சியர் சந்தோஷினி சந்திராவிடம் அழைத்து சென்றனர். அப்போது டாஸ்மாக் கடைக்கு மதுஅருந்த வருபவர்கள் போதை தலைக்கேறியதும், ஆபாசமாக பேசுகின்றனர். மேலும் அருகில் உள்ள அண்ணா நகர் 13-வது வார்டு பகுதி பெண்கள் அவ்வழியாக செல்லும் போது அவர்களை கேலி செய்கின்றனர். இதனால், இருதரப்பினர் மோதல் ஏற்படும் நிலை உள்ளது. எனவே இந்த கடையை வேறொரு இடத்துக்கு இடமாற்றம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

இதையடுத்து கோட்டாட்சியர் சந்தோஷினி சந்திரா உங்களது கோரிக்கைகளை மனுவாக கொடுங்கள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். தொடர்ந்து பொதுமக்கள் மனு கொடுத்து விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story