கள்ளக்காதல் தகராறில் தொழிலாளியை சுட்டுக்கொன்ற 2 பேருக்கு இரட்டை ஆயுள்தண்டனை


கள்ளக்காதல் தகராறில் தொழிலாளியை சுட்டுக்கொன்ற 2 பேருக்கு இரட்டை ஆயுள்தண்டனை
x
தினத்தந்தி 6 Dec 2017 4:15 AM IST (Updated: 6 Dec 2017 3:16 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்காதல் தகராறில் தொழிலாளியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து திருவண்ணாமலை கோர்ட்டு தீர்ப்பளித்தது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகில் உள்ள மேல்பாய்ச்சல் பகுதியை சேர்ந்தவர் துரை (வயது 43). இவரது மனைவி போதுமா. துரைக்கும் போதுமாவின் அக்காள் காஞ்சனாவிற்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. காஞ்சனா தனது கணவர் கோவிந்தனுடன் செங்கம் அருகில் மணிக்கல் பகுதியில் வசித்து வந்தார். தனது மனைவியுடன் துரை கள்ளத்தொடர்பு வைத்திருந்ததை அறிந்த கோவிந்தன் அதனை கைவிடும்படி கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

கடந்த 2004-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12-ந் தேதி துரை, அவரது நண்பர் மேல்பாய்ச்சல் பகுதியை சேர்ந்த வேலு (38) மற்றும் கோவிந்தன் ஆகியோர் மணிக்கல் அருகே உள்ள காப்பு காட்டிற்கு வேட்டைக்காக சென்றுள்ளனர். அப்போது விலங்குகளை வேட்டையாடுவதற்காக அவர்கள் நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்து உள்ளனர்.

காட்டிற்குள் செல்லும்போது அவருக்கும் கோவிந்தனுக்கும் இடையே இந்த பிரச்சினை தொடர்பாக மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது துரையுடன் சென்ற வேலு ஆத்திரம் அடைந்து கோவிந்தனை நாட்டுத்துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். அவருக்கு ஆதரவாக துரை செயல்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து மேல்செங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நேற்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகிழேந்தி தீர்ப்பு கூறினார். அப்போது, கோவிந்தன் கொலை செய்யப்பட்ட வழக்கில் வேலு மற்றும் துரை ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், தலா ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்தும் இரட்டைஆயுள்தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறினார். இதையடுத்து இருவரையும் போலீசார் சிறைக்கு அழைத்து சென்றனர்.

Next Story