ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிப்பு


ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிப்பு
x
தினத்தந்தி 6 Dec 2017 4:23 AM IST (Updated: 6 Dec 2017 4:23 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி பகுதியில் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

தூத்துக்குடி,

முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. நிகழ்ச்சியையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஜெயலலிதாவின் திருவுருவ படத்தை அ.தி.மு.க.வினர் அலங்கரிக்கரித்து வைத்து மாலை அணிவித்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர். தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ. அலுவலகம் முன்பு அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதா உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தொடர்ந்து அங்கிருந்து மவுன ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலத்துக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் முன்னிலை வகித்தார். ஊர்வலம் ஜெயராஜ் ரோடு, பழைய பஸ்நிலையம், டபிள்யூ.ஜி.சி. ரோடு வழியாக பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பு முடிவடைந்தது. அங்கு அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதா உருவப்படத்துக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர். ஊர்வலத்தில் பங்கேற்ற பெண்கள் சிலர் கண்ணீர் மல்க ஜெயலலிதா படத்தை கும்பிட்டபடியே சென்றனர்.

நிகழ்ச்சியில் முன்னாள் யூனியன் கவுன்சிலர் திருப்பாற்கடல், வக்கீல் பிரிவு தலைவர் செல்வக்குமார், மகளிர் அணி செரினா பாக்கியராஜ், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் ராஜ் நாராயணன், ஒன்றிய செயலாளர்கள் ராமச்சந்திரன்(திருச்செந்தூர்), சவுந்தரபாண்டி(சாத்தான்குளம்), தலைமை கழக பேச்சாளர் கருணாநிதி, அரசு வக்கீல் சுகந்தன் ஆதித்தன், வக்கீல் வீரபாகு உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள குறுக்குசாலை மற்றும் கீழ சண்முகபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் முன்னாள் எம்.எல்.ஏ மோகன் தலைமை தாங்கி, அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் படத்திற்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஓட்டப்பிடாரம் மற்றும் புதியம்புத்தூரில் நடந்த நிகழ்ச்சிகளுக்கு தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு அச்சக தலைவர் எஸ்.டி.பொன்ராஜ் தலைமை தாங்கினார். முன்னாள் யூனியன் தலைவர் காமாட்சி என்ற காந்தி, நகர செயலாளர்கள் ஆறுமுகசாமி, கொம்புமகாராஜா ஆகியோர் முன்னிலையில் அ.தி.மு.க.வினர் ஜெயலலிதா படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதே போல் ஓட்டப்பிடாரம் பகுதிகளில் அ.தி.மு.க. அம்மா அணி சார்பில் ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. புதியம்புத்தூர் பஸ் நிலையத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் சவரிமங்களம் முத்துசாமி தலைமை தாங்கினார். தொடர்ந்து ஓட்டப்பிடாரம், முப்பிலிவெட்டி, குறுக்குசாலை ஆகிய இடங்களில் ஜெயலலிதாவின் படத்துக்கு அ.தி.மு.க. அம்மா அணி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

எட்டயபுரம் அருகே சிந்தலக்கரையில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் சாமி சுப்புராஜ் தலைமையில் ஜெயலலிதாவின் படத்துக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். விளாத்திகுளத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் தலைமையில் ஜெயலலிதா படத்துக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் நகர செயலாளர் நெப்போலியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story