தூத்துக்குடியில், பூட்டிய வீட்டிற்குள் தனியார் நிறுவன ஊழியர் மர்மச்சாவு
தூத்துக்குடியில், பூட்டிய வீட்டிற்குள் தனியார் நிறுவன ஊழியர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார், உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி ஆசிரியர் காலனி 2–வது தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மகன் அருண்குமார்(வயது 38). திருமணமாகாத இவர், தனியார் ஏற்றுமதி–இறக்குமதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
ஒரு மாதத்திற்கு முன்பு அவருடைய பெற்றோர்கள் தஞ்சாவூரில் உள்ள தங்களின் இளைய மகனுடன் வசிப்பதற்காக சென்று விட்டனர். இதனால் வீட்டில் அருண்குமார் மட்டும் தனியாக இருந்து வந்தார். மேலும் கடந்த சில வாரங்களாக அவர் வேலைக்கும் செல்லவில்லை.
இந்த நிலையில், அவருடைய வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அந்த பகுதி பொதுமக்கள் தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் வீட்டின் கதடை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு அவருடைய உடல் மற்றும் தலை தனித்தனியாக அழுகிய நிலையில் உருக்குலைந்து கிடந்தன.
போலீசார் உடல் மற்றும் தலை பகுதியை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,‘ அருண்குமார் கடந்த 20 நாட்களுக்கு முன்பே வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம். தூக்கு கயிற்றில் அதிக நாட்கள் அவருடைய உடல் தொங்கியதால் அழுகிய நிலையில் தலை, உடல் பகுதி ஆகியவை தனியாக விழுந்து இருக்கலாம் என தெரிகிறது. இருந்தபோதிலும் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அதற்கான காரணம் என்ன? அல்லது அவருடைய சாவில் மர்மம் உள்ளதா? என்பது குறித்து தொடர் விசாரணை நடத்தி வருகிறோம் என்று தெரிவித்தார்.