கோடம்பாக்கம் பூகம்பம்


கோடம்பாக்கம் பூகம்பம்
x
தினத்தந்தி 6 Dec 2017 10:16 AM IST (Updated: 6 Dec 2017 10:16 AM IST)
t-max-icont-min-icon

கனவு தொழிற்சாலையான கோடம்பாக்கம் இப்போது கலகலத்துக்கொண்டு இருக்கிறது. எத்தனையோ அரசியல் பரபரப்புக்கு மத்தியில் தயாரிப்பாளரின் தற்கொலை விவகாரம் பூதாகரமாகி இருக்கின்றது.

ஜெமினி, வீனஸ் பிக்சர்ஸ், ஏவி.எம்., தேவர் பிலிம்ஸ், முக்தா பிலிம்ஸ், மாடர்ன் தியேட்டர்ஸ் என்றெல்லாம் நிறுவனங்கள் முன்னணியில் இருந்த காலத்தில் இல்லாத பிரச்சினை இப்போது உருவாகி இருக்கிறது.

ஒருபுறம் படத்தயாரிப்புக்காக கடன் கொடுத்தவரை குற்றம்சாட்டி கருத்து சொல்லும்போது மற்றொரு புறம் அவருக்கு ஆதரவுக்கரமும் நீள்கிறது.

ஏன் இந்த முரண்பாடு?.

ஜாக்பாட்டில் பணத்தை அள்ளிய நபர் வெளியே தெரிகிறான். பணத்தைக்கட்டி தோற்றவன் வெளியே தெரியாமல் போகிறான்.

அவனது வலியை மற்றவர்களால் உணர முடியவில்லை.

வெற்றி பெற்றவனை மட்டும் பார்த்து பலர் அதே பாதையில் செல்ல களம் இறங்கி கையை சுட்டுக்கொள்கிறார்கள்.

சிலர் விட்டதை அடுத்த படத்தில் பிடித்துவிட வேண்டும் என்று திரும்பத் திரும்ப களத்தில் இறங்கி காயம் அடைந்ததும், இந்தத் துறை மிக மோசம் என்று சொல்லிக்கொள்கிறார்கள்.

கடந்த ஆண்டு தயாரிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் இன்னமும் வெள்ளித்திரையை தொட முடியாமல் முடங்கிக் கிடக்கின்றன.

இந்த ஆண்டும் அதே போன்ற பட்டியல் தயாராகி வருகிறது.

ஆனாலும் படங்களின் தயாரிப்பு எண்ணிக்கை கூடிக்கொண்டேதான் போகிறது. ஆரோக்கியமில்லாத துறை என்று கூறிக்கொண்டே, எப்படியாவது நிதி உதவி பெற்று படத்தை முடித்து காசை பார்த்து விடலாம் என்ற நம்பிக்கை துளிர் விட்டு விடுகிறது.

இந்த நிலைக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது சரியான திட்டமிடல் இல்லாதது என்கிறார்கள்.

கதை பஞ்சத்துடன் படத்துக்கு புதிதாக பெயர் கூட வைக்கத் தெரியாமல் இருப்பவர்களை நம்பி தயாரிப்பை தொடங்கி விட்டு முக்கால் கிணறு தாண்டும் போது பணம் இல்லாமல் நிதிநிறுவனத்தை தேடி ஓடும் நிலை ஓயவில்லை.

2 மணி நேரம் ஓடும் படத்தை தயாரித்து முடிக்க சிலர் 2 வருடம் இழுத்து இயக்குகிறார்கள். அதில் ஏற்படும் தாமதம் தயாரிப்பாளர்களை பதம் பார்க்கிறது. ஆனால் மற்றவர் தயாரிப்பில் வெற்றிப்படங்களை கொடுத்து அதன் மூலம் பிரபலமான இயக்குனர்கள், பின்னர் தயாரிப்பாளராகி தங்கள் பேனரில் படம் தயாரிக்கும்போது இந்த தாமதத்தை காட்டுவதில்லை. அதில் அவர்கள் உஷாராக இருக்கிறார்கள்.

கடன் கொடுப்பவர்களை மட்டுமே நம்பி தயாரிப்பை தொடங்குவோரும் இருக்கிறார்கள். கடன் கொடுப்பவர்களில் சிலர் சொந்த பணத்தை கொடுப்பது இல்லை. அவர்களுக்கு மற்றவர்களின் பணம் வேறு வகையில் வந்து சேருகிறது. அதை தங்களது பெயரில் இதில் இறக்கும் நிலையும் உள்ளது. இதனால் அவர்களும் பல தரகர்களை வைத்து தயாரிப்பாளர்களை வலையில் வீழ்த்தும் நிலையும் இங்கு இருக்கிறது.

அடுத்ததாக ஸ்டார் வேல்யூ என்ற பெயரில் நடிகர்களுக்கு சம்பளத்தை கோடிக்கணக்கில் கொடுத்து விட்டு அந்த படம் வசூல் தராமல் நஷ்டப்படுகிறார்கள். பிரபலமான ஒரு நடிகர் முன்னர் சொல்லும்போது, எனது சம்பளத்தை உயர்த்தினால் மற்ற வகையிலும் செலவு கூடும். ஒரு பாடலுக்கு ரூ.30 லட்சத்துக்கு செட் போட்டு தயாரித்து விட்டு அந்த பணம் எல்லாம் வசூலாகி தயாரிப்பாளருக்கு கிடைக்கும் வரை படம் தியேட்டரில் நிற்கணும். ஆனால் இப்போது நிலைமை அப்படி இல்லை. அதனால் எனது உயரம் இவ்வளவுதான் என என்னை நானே குறைத்து மதிப்பிட்டு ஊதியம் வாங்குகிறேன் என்றார்.

நெத்தியடியான இந்த கருத்தை பல நடிகர்கள் இப்போது ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்.

அரசுக்கு வருமானம் ஈட்டித்தருவதோடு மக்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு சாதனமாக இருக்கும் தமிழ் சினிமாத்துறைக்கு இப்போது போதாத காலம் போல.

அதனால்தானோ என்னவோ இங்கு பிரச்சினைக்கு மேல் பிரச்சினை வருகிறது. ஆனால் அவர்களுக்குள்ளே மாறுபட்ட கருத்தை இந்த விவகாரம் ஏற்படுத்தி இருப்பது கொஞ்சம் வித்தியாசமானதுதான்.

வட்டிக்குகடன் கொடுப்பவர் நல்லவரா? அவர் அந்த வட்டியை வசூலிக்க வில்லன் அவதாரம் எடுப்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக என்பது போன்ற வினாக்களுக்கு எப்போது விடை கிடைக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

-குறும்பை கதிரவன்


Next Story