ஒன்றிய அளவில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள குழுக்கள் அமைப்பு


ஒன்றிய அளவில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள  குழுக்கள் அமைப்பு
x
தினத்தந்தி 7 Dec 2017 4:15 AM IST (Updated: 6 Dec 2017 11:17 PM IST)
t-max-icont-min-icon

ஒன்றிய அளவில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன என்று கூடுதல் தலைமைசெயலாளர் ஹான்ஸ்ராஜ் வர்மா கூறினார்.

நாகர்கோவில்,

குமரியில் நடைபெறும் புயல் சேத மீட்பு பணிகள் மற்றும் பணிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்ற நிலை ஆகியவை குறித்து அதிகாரிகளுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு, ஊரக வளர்ச்சித்துறை அரசு கூடுதல் தலைமைச்செயலாளர் ஹான்ஸ்ராஜ் வர்மா தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

‘ஒகி‘ புயல் பாதிப்பால் குமரி மாவட்டத்தில் இதுவரை கண்டிராத கடும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. புயல் பாதிப்பை தொடர்ந்து, தமிழக  முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்படி, புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் மீதான மீட்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

குமரி மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மலை பகுதிகள் மற்றும் ஊராட்சி பகுதிகளில் அதிகஅளவில் மரங்கள் சாய்ந்து கிடக்கிறது. அவற்றை எந்திரங்கள் மற்றும் மதுரை, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் தொழில் ரீதியாக மரம் வெட்டுபவர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களின் மூலம் சாய்ந்துகிடக்கும் மரங்களை வெட்டி உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஊராட்சிப்பகுதிகளில் தூய்மைப் பணியினை முழுமையான அளவு செயல்படுத்தவும், உயர் நீர்த்தேக்கத்தொட்டிகளில் தண்ணீரை சுத்திகரிப்பு செய்திடவும், சாலைகளில் ஏற்பட்டிருக்கும் பெரிய மற்றும் சிறிய பள்ளங்களை சரிசெய்து, போக்குவரத்து பயன்பாட்டிற்கு உகந்ததாக மாற்றியமைக்கவும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஊராட்சி பகுதிகளில் உள்ள பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் விழுந்து கிடக்கும் மரங்களை துரிதமாக அப்புறப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில், அனைத்து ஒன்றிய அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை இயக்குனர் பாஸ்கரன் கூறியதாவது:–

கிராமங்களுக்கு சீரான மின்சாரம் மற்றும் குடிநீர் வினியோகம் செய்வதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். குமரி மாவட்டத்திலுள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 94 ஊராட்சிகளில் 1,155 கிராமங்களில் ஜெனரேட்டர் மூலமாக 1,034 கிராமங்களில் குடிநீர் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், மின்சாரம் வினியோகம் பாதிக்கப்பட்டதாக கண்டறியப்பட்ட 246 கிராமங்களில் உடனடி நடவடிக்கையாக 46 கிராமங்களுக்கு மின் வினியோகம் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள இடங்களில் சாய்ந்து கிடக்கும் மரங்களை அகற்றி மின்சார வினியோகத்தை சீராக்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story