ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: தொப்பி சின்னத்துக்கு 29 பேர் போட்டி குலுக்கல் முறையில் ஒதுக்க முடிவு
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளர்கள் பலர் தொப்பி சின்னத்தை கேட்டு கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை,
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் டி.டி.வி.தினகரன் உள்பட, சுயேச்சை வேட்பாளர்கள் பலர் தொப்பி சின்னத்தை கேட்டு கோரிக்கை விடுத்துள்ளனர். அங்கு தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் பரிசீலனை முடிவடைந்த நிலையில், சின்னம் ஒதுக்கீடு குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியதாவது:-
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வேட்புமனுக்கள் பரிசீலனை முடிந்துள்ளது. 7-ந் தேதி (இன்று) பிற்பகல் 3 மணி வரை மனுக்களை வாபஸ் பெற அவகாசம் உள்ளது. இங்கு பெறப்பட்ட மொத்தம் 145 மனுக்களில், 72 மனுக்கள் ஏற்கப்பட்டு, 73 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் தொப்பி சின்னத்தைக் கேட்டு 52 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
இதில் தள்ளுபடி செய்யப்பட்ட மனுக்கள் போக தற்போது தொப்பி சின்னம் கேட்டவர்களில் தினகரன் உட்பட 29 சுயேச்சைகள் களத்தில் உள்ளனர்.
இனி குலுக்கல் முறையில் இவர்களில் ஒருவருக்கு தொப்பி சின்னம் ஒதுக்கப்படும். வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணி நாளை (இன்று) பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.
இவ்வாறு ராஜேஷ் லக்கானி கூறினார்.
Related Tags :
Next Story