ஒன்னள்ளி அருகே சரக்கு வேன்–தனியார் பஸ் மோதல்; டிரைவர் உள்பட 2 பேர் பலி


ஒன்னள்ளி அருகே  சரக்கு வேன்–தனியார் பஸ் மோதல்; டிரைவர் உள்பட 2 பேர் பலி
x
தினத்தந்தி 7 Dec 2017 3:00 AM IST (Updated: 7 Dec 2017 12:41 AM IST)
t-max-icont-min-icon

ஒன்னள்ளி அருகே சரக்கு வேன்– தனியார் பஸ் மோதிக்கொண்ட விபத்தில் சரக்கு வேன் டிரைவர் உள்பட 2 பேர் பலியாகினர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

சிக்கமகளூரு,

ஒன்னள்ளி அருகே சரக்கு வேன்– தனியார் பஸ் மோதிக்கொண்ட விபத்தில் சரக்கு வேன் டிரைவர் உள்பட 2 பேர் பலியாகினர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

தொழிலாளிகள்

தாவணகெரே மாவட்டம் ஒன்னள்ளி தாலுகா அரேகெரே கிராமத்தை சேர்ந்தவர் தர்‌ஷன் (வயது 24). டிரைவரான இவர் நேற்று காலை அதேப்பகுதியை சேர்ந்த தொழிலாளிகளான ஹரீஷ், பிரவீன், பிரகலாத், மகந்தராஜ் உள்பட 5 பேரை தனது சரக்கு வேனில் ஏற்றிக்கொண்டு ஹரிகரா பகுதியில் உள்ள பாக்கு தோட்டத்திற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது செட்டனஹள்ளி பகுதியில் வந்து கொண்டிருந்தபோது முன்னால் சென்ற மாட்டு வண்டியை தர்‌ஷன் முந்திச்செல்ல முயன்றதாக தெரிகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த தனியார் பஸ் மீது சரக்கு வேன் பயங்கரமாக மோதி அருகே உள்ள சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

2 பேர் பலி

மேலும் சரக்கு வேன் மோதிய வேகத்தில் தனியார் பஸ்சும் அருகில் உள்ள விவசாய நிலத்திற்குள் பாய்ந்தது. இதில் அந்த பஸ்சின் முன்பக்க கண்ணாடி சுக்கு நூறாக நொறுங்கியது. இந்த விபத்தில் சரக்கு வேனின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் விரைந்து வந்து சரக்கு வேனின் இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளிகளை மீட்க முயன்றனர். அப்போது தர்‌ஷன், ஹரீஷ் ஆகிய 2 பேரும் தலையில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானது தெரியவந்தது.

மேலும் பிரவீன், பிரகலாத், மகந்தராஜ் உள்பட 4 தொழிலாளர்கள் படுகாயமடைந்து உயிருக்கு போராடியது தெரியவந்தது. உடனே அவர்களை அந்தப்பகுதி மக்கள் மீட்டு சிவமொக்காவில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

விசாரணை

அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள அவர்களுக்கு, டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதேபோல் தனியார் பஸ்சில் பயணித்தவர்களில் 10 பேர் லேசான காயம் அடைந்தனர். அவர்களும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஒன்னள்ளி புறநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். மேலும் விபத்தில் இறந்த தர்‌ஷன், ஹரீஷ் ஆகிய 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து ஒன்னள்ளி புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story