கர்நாடக சட்டசபை தேர்தலில் எங்கள் கட்சி 30 தொகுதிகளில் சுலபமாக வெற்றி பெறும் குமாரசாமி பேட்டி


கர்நாடக சட்டசபை தேர்தலில் எங்கள் கட்சி 30 தொகுதிகளில் சுலபமாக வெற்றி பெறும்  குமாரசாமி பேட்டி
x
தினத்தந்தி 7 Dec 2017 2:30 AM IST (Updated: 7 Dec 2017 12:45 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக சட்டசபை தேர்தலில் எங்கள் கட்சி 30 தொகுதிகளில் சுலபமாக வெற்றி பெறும் என்று ஜனதாதளம் (எஸ்) மாநில தலைவர் குமாரசாமி கூறினார்.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபை தேர்தலில் எங்கள் கட்சி 30 தொகுதிகளில் சுலபமாக வெற்றி பெறும் என்று ஜனதாதளம் (எஸ்) மாநில தலைவர் குமாரசாமி கூறினார்.

ஜனதா தளம்(எஸ்) கட்சி மாநில தலைவர் குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

30 தொகுதிகளில் சுலபமாக வெற்றி

சட்டசபை தேர்தலில் எங்களுக்கு பின்னடைவு ஏற்படும் அம்சங்கள் குறித்து நாங்கள் சில முடிவுகளை எடுத்துள்ளோம். 70 முதல் 80 தொகுதிகளில் வெற்றி பெற்றே தீர வேண்டும். எங்கள் கட்சி 30 தொகுதிகளில் சுலபமாக வெற்றி பெறும். அந்த 30 தொகுதிகளில் டிக்கெட் பெற அதிக போட்டி உள்ளது. அங்கு வாய்ப்பு கேட்பவர்களிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி வெற்றி வாய்ப்பு உள்ளவர்களுக்கு டிக்கெட் வழங்கப்படும்.

கடந்த முறை நிகழ்ந்த தவறுகள் மீண்டும் இப்போது நடக்காத வண்ணம் நாங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுகிறோம். இந்த முறை நாங்கள் உழைக்காவிட்டாலும் 70 தொகுதிகள் வரை வெற்றி பெறுவோம். ஆனால் ஆட்சி அமைக்க தேவையான எண்ணிக்கையை அடைய வேண்டும் என்பது எங்களின் குறிக்கோள். 113 தொகுதிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே கவர்னர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பார்.

விருப்பம் இல்லை

வேறு கட்சிகளின் கதவை தட்ட எங்களுக்கு விருப்பம் இல்லை. கூட்டணி ஆட்சி அமைந்தால் நாங்கள் கூறும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது கடினம். குஜராத் தேர்தல் முடிவுக்கு பிறகு காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா கட்சிகளின் நடவடிக்கையில் பெரிய மாற்றங்கள் ஏற்படும். அந்த தேர்தல் முடிவுக்கு பிறகு தேசிய கட்சிகளில் இருந்து ஏராளமானவர்கள் எங்கள் கட்சியில் வந்து சேருவார்கள்.

கடந்த 10 ஆண்டுகளில் 2 பொதுத்தேர்தலை சந்தித்து உள்ளேன். வருகிற சட்டசபை தேர்தலில் 224 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துவோம். அனைத்து தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு இல்லை. வட கர்நாடகத்தில் எங்கள் கட்சிக்கு பலம் இல்லை என்பது உண்மை தான். பழைய மைசூரு பகுதிகளில் அதிகபட்ச தொகுதிகளில் வெற்றி பெறுவோம்.

மதிப்பெண் பட்டியலில் முறைகேடு

முந்தைய பா.ஜனதா ஆட்சியில் ‘ஆபரே‌ஷன் தாமரை‘ என்ற பெயரில் காங்கிரஸ் மற்றும் எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் சிலரை பா.ஜனதா இழுத்தது. இதற்கு சித்தராமையாவும் மறைமுகமாக உடந்தையாக இருந்தார் என்று நான் கூறினேன். இதை சித்தராமையாவும் ஒப்புக் கொண்டுள்ளார். கல்லூரிகளில் மதிப்பெண் பட்டியலில் முறைகேடு நடந்துள்ளது. இந்த ஆட்சியில் எது வேண்டுமானாலும் நடக்கும்.

இதுபற்றி மாணவர் காங்கிரசாரே மேலிட பொறுப்பாளரிடம் மனு கொடுத்துள்ளனர். நான் அதானி நிறுவனத்தை கருப்பு பட்டியலில் சேர்த்தேன். இப்போது அந்த நிறுவனத்திற்கு சித்தராமையா அனுமதி வழங்கியுள்ளார்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.


Next Story