பாபர் மசூதி இடிப்பு தினம்: மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது


பாபர் மசூதி இடிப்பு தினம்: மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது
x
தினத்தந்தி 7 Dec 2017 4:00 AM IST (Updated: 7 Dec 2017 1:13 AM IST)
t-max-icont-min-icon

பாபர் மசூதி இடிப்பைக் கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் மதுரை முனிச்சாலை, ஒபுளாபடித்துறை பகுதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மதுரை,

பாபர் மசூதி இடிப்பைக் கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் மதுரை முனிச்சாலை, ஒபுளாபடித்துறை பகுதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மதுரை மாவட்ட தலைவர் ஜாபர்சுல்தான் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் கனியமுதன், தமிழ்புலிகள் கட்சி திருவள்ளுவன், திராவிட விடுதலை கழகம் மணியமுதன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் தெற்குவெளி வீதி, குப்புபிள்ளை தோப்பு பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தெற்கு மாவட்ட த.மு.மு.க. தலைவர் ஷேக் இரப்ராகிம் தலைமை தாங்கினார். மதுரை வடக்கு மாவட்ட தலைவர் சிக்கந்தர் வரவேற்றார். த.மு.மு.க. மாநில பொதுச் செயலாளர் ஹமீது கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இதில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் விஜயராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினார்கள்.

மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் ஷேக்முகமது அப்துல்லா தலைமையில் நிர்வாகிகள் ரெயில் நிலையம் முன்பு நின்று முற்றுகை போராட்டம் செய்தனர். எனவே அவர்கள் 50 பேரை போலீசார் கைது செய்தனர். மதுரை எம்.ஜி.ஆர். பஸ் நிலையம் பகுதியில் அநீதிக்கு எதிரான கூட்டமைப்பு சார்பில் மாவட்ட துணை அமைப்பாளர் முகமது உசேன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பின்னர் அவர்கள் மறியல் செய்ய முயன்றனர். எனவே அவர்கள் 26 பேரை போலீசார் கைது செய்தனர். மதுரை தல்லாகுளம் தபால் நிலையத்தை முற்றுகையிட்டு மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகத்தினர் மாவட்ட தலைவர் சிக்கந்தர் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் மறியலுக்கு முயன்ற அவர்கள் 34 பேரை போலீசார் கைது செய்தனர்.


Next Story