குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பகுதியாக அறிவிக்கக்கோரி வழக்கு மத்திய–மாநில அரசுகளுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்


குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பகுதியாக அறிவிக்கக்கோரி வழக்கு மத்திய–மாநில அரசுகளுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்
x
தினத்தந்தி 7 Dec 2017 4:15 AM IST (Updated: 7 Dec 2017 1:13 AM IST)
t-max-icont-min-icon

புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பகுதியாக அறிவிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கு குறித்து மத்திய–மாநில அரசுகள் பதில் அனுப்பும்படி, நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

மதுரை அய்யர்பங்களாவை சேர்ந்த ராஜன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

கடந்த 29, 30–ந்தேதிகளில் குமரி மாவட்டத்தை ஒகி புயல் கடுமையாக தாக்கியது. இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்களில் அதிக மழை பெய்யும் என்று தமிழக அரசும், மீன் வளத்துறையும் தெரிவித்தன. ஆனால் ஒகி புயல் குறித்து முன்னெச்சரிக்கை விடுக்கப்படவில்லை. இதனால் ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களுக்கும் முறையான எச்சரிக்கை அளிக்கப்படவில்லை. ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் சென்ற மீனவர்கள் கரைதிரும்பாததால் அவர்களை ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்க கோரியும், அதற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

இதுபோன்ற சமயங்களில் கடலுக்குச் சென்ற மீனவர்களை மீட்க ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்படும் என்று முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா உறுதி அளித்திருந்தார். அதை செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே ஒகி புயலால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளை தேசிய பேரிடர் பகுதியாக அறிவிக்க வேண்டும். புயலில் சிக்கி உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சமும் இழப்பீடாக வழங்க உத்தரவிட வேண்டும்.

ஹெலிகாப்டர் தளம் அமைக்கவும், போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து மின்சார வசதியை செய்து தர உத்தரவிட வேண்டும். புயலால் தங்களது உடமைகளை இழந்தவர்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் வேணுகோபால், தாரணி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘‘புயலால் பாதித்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து எவ்வித உத்தரவையும் பிறப்பிக்க இயலாது என்று சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு தெரிவித்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர இந்த கோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது’’ என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

பின்னர் இதுகுறித்து மத்திய–மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 20–ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.


Next Story