சாம்ராஜ்நகர் அருகே 8–ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை விடுதி காப்பாளரே காரணம் என குற்றச்சாட்டு


சாம்ராஜ்நகர் அருகே 8–ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை விடுதி காப்பாளரே காரணம் என குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 7 Dec 2017 2:00 AM IST (Updated: 7 Dec 2017 1:35 AM IST)
t-max-icont-min-icon

சாம்ராஜ்நகர் அருகே 8–ம் வகுப்பு மாணவன் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.

கொள்ளேகால்,

சாம்ராஜ்நகர் அருகே 8–ம் வகுப்பு மாணவன் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான். அந்த மாணவனின் தற்கொலைக்கு தங்கும் விடுதி காப்பாளரே காரணம் என கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மாணவன் தற்கொலை

சாம்ராஜ்நகர் தாலுகா பிசலவாடி பகுதியை சேர்ந்தவன் ரவிக்குமார். இவன் அந்த பகுதியில் உள்ள ஆதிதிராவிட உண்டு, உறைவிட பள்ளியில் தங்கி 8–ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் வழக்கம்போல ரவிக்குமார் மற்ற மாணவர்களுடன் இரவு சாப்பிட்டு விட்டு விடுதியில் தூங்கினான். இந்த நிலையில் நேற்று காலை அந்த பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு சென்ற ரவிக்குமார், திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவனின் பெற்றோர், அவனின் உடலை பார்த்து கதறி அழுதனர். அந்த சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினரும் அங்கு விரைந்து வந்தனர். மேலும் இதுகுறித்து சாம்ராஜ்நகர் புறநகர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

விடுதி காப்பாளர் மீது புகார்

சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த போலீசார், மாணவனின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். ஆனால் ரவிக்குமார் என்ன காரணத்திற்காக தற்கொலை செய்துகொண்டான்? என்பது தெரியவில்லை. அப்போது அங்கிருந்த கிராம மக்கள் விடுதி காப்பாளர் சீனிவாசன், தான் மாணவன் தற்கொலை செய்துகொள்ள காரணம் என குற்றம் சாட்டினர்.

மேலும் கடந்த மாதமும் இங்கு படித்த ஒரு மாணவன் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாகவும் அங்கிருந்தவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். எனவே அவரை கைது செய்து முறையான விசாரணை நடத்தினால் மாணவர்களின் தற்கொலைக்கு என்ன காரணம்? என்பது தெரியவரும் என போலீசாரிடம் தெரிவித்தனர்.

விசாரணை

விடுதி காப்பாளர் சீனிவாசன் ஏற்கனவே கொள்ளேகாலில் உள்ள உண்டு, உறைவிடப் பள்ளியில் பணிப்புரிந்த போதும் 2 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதைதொடர்ந்து ரவிக்குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக சாம்ராஜ்நகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இதுகுறித்து கொள்ளேகால் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதுபற்றி சீனிவாசனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.


Next Story