அயோத்தியில் ராமர் கோவில் கட்டக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியை சேர்ந்த 1000 பேர் கைது


அயோத்தியில் ராமர் கோவில் கட்டக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியை சேர்ந்த 1000 பேர் கைது
x
தினத்தந்தி 7 Dec 2017 3:45 AM IST (Updated: 7 Dec 2017 1:43 AM IST)
t-max-icont-min-icon

அயோத்தியில் ராமர் கோவில் கட்டக்கோரி கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியை சேர்ந்த 1000 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை,

அயோத்தியில் ராமர் கோவிலை உடனடியாக கட்ட வேண்டும், இதற்காக பாராளுமன்றத்தில் மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோவை காந்திபுரத்தில் உள்ள அரசு விரைவு போக்குவரத்து பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப் படும் என்று இந்து முன்னணி சார்பில் அறிவிக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. அனுமதியை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தினால் கைது செய்யப்படுவார்கள் என்று போலீஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டது. இருந்தபோதிலும் நேற்று காலை 10 மணியில் இருந்து இந்து முன்னணியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் அரசு விரைவு போக்குவரத்து பஸ்நிலையம் அருகே திரண்டனர். பின்னர் அங்கு அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு இந்து முன்னணியின் மாவட்ட தலைவர் கே.தசரதன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் சதீஷ் முன்னிலை வகித்தார். மாவட்ட செய்தி தொடர்பாளர் சி.தனபால் வரவேற்றார். மாநில பேச்சாளர் மூகாம்பிகை மணி, மாவட்ட பேச்சாளர் கிருஷ்ணன், மாவட்ட செயலாளர்கள் ஜெய்சங்கர், ஹரி, மாவட்ட துணைத்தலைவர் முரளி உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள்.

ஏற்கனவே இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பதால், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 1000 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோவையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

முன்னதாக மாவட்ட தலைவர் கே.தசரதன் நிருபர்களிடம் கூறும்போது, ‘அயோத்தியில் ராமர் கோவில் கட்டக்கோரி நாங்கள் பல போராட்டங்களை நடத்தி வருகிறோம். ஆனால் இதுவரை அதற்கான பதில் கிடைக்கவில்லை. எனவே மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுத்து, ராமரின் ஜென்ம பூமியான அயோத்தியில் ராமர் கோவிலை கட்ட உடனடியாக சட்டம் இயற்ற வேண்டும்’ என்றார்.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டக்கோரி விவேகானந்தர் மக்கள் இயக்கம் சார்பில் கோவை விமான நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக அந்த இயக்கத்தை சேர்ந்த சிவப்பிரகாசம் தலைமையில் நிர்வாகிகள் கோவை கொடிசியாவில் இருந்து ஊர்வலமாக விமான நிலையத்தை நோக்கி சென்றனர். அப்போது அங்கு பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீசார் அவர்கள் 11 பேரை கைது செய்தனர்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி (தமிழகம்) சார்பில் கோவை ராம்நகரில் உள்ள ராமர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதற்கு மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமை தாங்கினார். இதில் அந்த கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

அதுபோன்று தமிழ்நாடு ராமர் சேனா சார்பில் ராமர் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. நிறுவன தலைவர் ஆர்.ஆறுமுகம் தலைமை தாங்கினார். இந்த பூஜையில் மாவட்ட செய்தி தொடர்பாளர் ஆனந்தகுமார், கோவை மண்டல தலைவர் மகேந்திரன், மாவட்ட தலைவர் பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக இந்த அமைப்பை சேர்ந்தவர்கள், அயோத்தியில் ராமர் கோவில் கட்டக்கோரி கோ‌ஷம் எழுப்பினார்கள்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி சிவசேனா மாநில செயலாளர் முருகன் தலைமையில் நிர்வாகிகள் கோவை கோனியம்மன் கோவிலில் அங்கப்பிரதட்சனம் செய்தனர். இதில் அந்த கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story