விழுப்புரத்தில் ஆக்கிரமிப்பில் இருந்த தி.மு.க. நகர அலுவலகம், கடைகள் அகற்றம்
விழுப்புரத்தில் ஆக்கிரமிப்பில் இருந்த தி.மு.க. நகர அலுவலகம் மற்றும் கடைகள் அதிரடியாக அகற்றப்பட்டன.
விழுப்புரம்,
விழுப்புரம் நேருஜி சாலையில் ஊரல் குட்டை ஓடை புறம்போக்கு இடம் உள்ளது. இந்த இடத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து பல ஆண்டுகளாக கடைகள் வைத்து நடத்தி வந்தனர். இந்த ஆக்கிரமிப்புகளால் மழைக்காலங்களின்போது தண்ணீர் செல்ல வழியின்றி கால்வாய்கள் நிரம்பி நடுரோட்டிலேயே குளம்போல் தேங்கியது.
எனவே இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி நகராட்சி நிர்வாகத்திற்கும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் நகராட்சி நில அளவைத்துறையினர் ஆய்வு செய்ததில் ஓடை புறம்போக்கு பகுதியை ஆக்கிரமித்து 13 கடைகளும் மற்றும் நகர தி.மு.க. அலுவலகமும் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து ஆக்கிரமிப்புகளை தாங்களாகவே முன்வந்து அகற்றிக்கொள்ளுமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு கடந்த 21 நாட்களுக்கு முன்பாக நகராட்சி நிர்வாகம் மற்றும் வருவாய்த்துறை சார்பில் எச்சரிக்கை நோட்டீசு வழங்கப்பட்டது.
அதுமட்டுமின்றி அந்தந்த ஆக்கிரமிப்பு கடைகள் மற்றும் நகர தி.மு.க. அலுவலக சுவர்களிலும் எச்சரிக்கை நோட்டீசு ஒட்டப்பட்டது. இருப்பினும் அதிகாரிகள் கொடுத்த கால அவகாசம் முடிந்த பிறகும் ஆக்கிரமிப்புதாரர்கள் தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ளவில்லை.
இந்நிலையில் நேற்று காலை 11.45 மணியளவில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடங்கியது. இதற்காக விழுப்புரம் நேருஜி சாலையில் மின்வாரிய ஊழியர்கள் மூலம் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து, விழுப்புரம் தாசில்தார் சுந்தர்ராஜன், நகராட்சி ஆணையர் செந்திவேல் ஆகியோர் தலைமையில் வருவாய்த்துறை ஊழியர்கள், நகராட்சி ஊழியர்கள் 3 பொக்லைன் எந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த பணி மாலை 5 மணி வரை நடந்தது. ஆக்கிரமிப்பில் இருந்த 13 கடைகளும் மற்றும் நகர தி.மு.க. அலுவலகத்தின் பெரும் பகுதியும் நேற்று ஒரே நாளில் பொக்லைன் எந்திரம் மூலம் அதிரடியாக அகற்றப்பட்டது.
இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணி காரணமாக விழுப்பும்– புதுச்சேரி சாலையில் நேற்று காலை முதல் மாலை வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகனங்கள் ஊர்ந்து சென்றன. முழுவதுமாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட பிறகே போக்குவரத்து சீரானது.
மேலும் ஆக்கிரமிப்பு அகற்றப்படுவதையொட்டி ஏதேனும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் மகேஷ், காமராஜ், அண்ணாத்துரை, முத்து, சப்–இன்ஸ்பெக்டர்கள் மருது, பாலசிங்கம், சுரேஷ் மற்றும் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் நேருஜி சாலையில் ஊரல் குட்டை ஓடை புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடைகள் நேற்று அகற்றப்பட்டன. இதற்காக 21 நாட்களுக்கு முன்பாகவே சம்பந்தப்பட்ட கடை வியாபாரிகளுக்கு எச்சரிக்கை நோட்டீசு வழங்கப்பட்டது. இருப்பினும் கடைகளை அகற்ற வந்த அதிகாரிகளிடம் அந்த வியாபாரிகள் மேலும் கால அவகாசம் கேட்டு வாக்குவாதம் செய்தனர். அதோடு பொக்லைன் எந்திர டிரைவரிடமும் பிரச்சினை செய்து கடைகளை இடிக்க விடாமல் தடுத்து கடை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினார்கள். மேலும் ஆத்திரமடைந்த வியாபாரிகள் மதியம் 12.40 மணியளவில் திடீரென அப்பகுதியில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே அவர்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் அவர்கள் மறியலை கைவிடவில்லை. இதையடுத்து அவர்களிடம் மறியலை கைவிடுமாறும் இல்லையெனில் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்ததன்பேரில் அவர்கள் 12.50 மணிக்கு மறியலை கைவிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.