அம்பேத்கர் நினைவுநாள் பேனர் கிழிப்பு: பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்


அம்பேத்கர் நினைவுநாள் பேனர் கிழிப்பு: பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்
x
தினத்தந்தி 7 Dec 2017 4:30 AM IST (Updated: 7 Dec 2017 1:54 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் அருகே அம்பேத்கர் நினைவுநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர் கிழிக்கப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அடுக்கம்பாறை,

அம்பேத்கர் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. அவருடைய சிலைகள் மற்றும் உருவப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அம்பேத்கர் படங்களுடன் பேனர்களும் வைக்கப்பட்டிருந்தது. அடுக்கம்பாறையை அடுத்த மூஞ்சூர்பட்டு காலனி பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலை அருகிலும் அந்தப்பகுதி இளைஞர்கள் அம்பேத்கர் படங்களுடன் பேனர் வைத்திருந்தனர்.

இந்த பேனரை நேற்று முன்தினம் இரவு யாரோ மர்ம நபர்கள் கிழித்துள்ளனர். இதை நேற்று காலையில் அந்தப்பகுதி பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அங்கு திரண்டனர்.

இதனையடுத்து அவர்கள் பேனரை கிழித்தவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் குறித்து அறிந்த வேலூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டி தலைமையில் போலீசார் விரைந்துசென்று மறியல் போராட்டம் நடத்திய பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பேனரை கிழித்ததாக 3 பேர் பெயர்களை கூறி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். அதைத்தொடர்ந்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். 

Next Story