திருப்பூரில் போலி குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனத்திற்கு ‘சீல்’
திருப்பூரில் போலியாக இயங்கி வந்த குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனத்திற்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
திருப்பூர்,
திருப்பூருக்குட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி இயங்கும் உணவு நிறுவனங்கள், போலி குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனங்கள் மீது உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் திருப்பூர் இடுவம்பாளையம், முகாம்பிகை நகர் வண்டிகாடு பகுதியில் பிற முன்னணி நிறுவனங்களின் பெயரில் போலியாக குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருவதாக திருப்பூர் உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
தகவலின்படி நேற்று அந்த பகுதிக்கு சென்ற மாவட்ட நியமன அதிகாரி தமிழ்செல்வன் தலைமையிலான உணவு பாதுகாப்பு அதிகாரிகள் முருகேசன், விஜயராஜ், தங்கவேல் உள்ளிட்ட அதிகாரிகள் அடங்கிய குழுவினர் அந்த பகுதியில் உள்ள கணேசன்(வயது 51) என்பவரின் வீட்டில் ஆய்வு செய்தனர்.
அப்போது அந்த வீட்டில் முன்னணி நிறுவனம் ஒன்றின் பெயரில் குடிநீர் கேன்கள் இருந்ததையும், நிலத்தடி நீரை முறையாக சுத்திகரிப்பு செய்யாமல் கேன்களில் நிரப்பி விற்பனை செய்ததும், வீட்டிற்கு எடுக்கப்பட்ட மின் இணைப்பில் குடிநீர் சுத்திகரிப்புக்கான எந்திரங்கள் இயக்கப்பட்டு வந்ததும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அங்கிருந்த 20 கேன்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த வீட்டிற்கு ‘சீல்’ வைத்ததுடன், மின் இணைப்பை துண்டிக்கவும், மின்வாரிய அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்தனர். இதை நடத்தி வந்த கணேசன் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், இது போல முறைகேடாக இயங்கும் நிறுவனங்களை கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.