பர்கூர் மலைப்பாதையில் 400 அடி பள்ளத்தில் ரிக் லாரி பாய்ந்தது; தொழிலாளி சாவு


பர்கூர் மலைப்பாதையில் 400 அடி பள்ளத்தில் ரிக் லாரி பாய்ந்தது; தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 7 Dec 2017 4:15 AM IST (Updated: 7 Dec 2017 2:23 AM IST)
t-max-icont-min-icon

பர்கூர் மலைப்பாதையில் 400 அடி பள்ளத்தில் ரிக் லாரி பாய்ந்ததில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்தில் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

அந்தியூர்,

ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள ஆலாம்பாளையத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார். ரிக் லாரி உரிமையாளர். இவருடைய ரிக் லாரியில் அதே ஊரை சேர்ந்த செல்வராஜ் (வயது 29) என்பவர் டிரைவராக இருந்து வந்தார்.

இந்த லாரியில் கோபி அருகே உள்ள புதுக்கரைப்புதூரை சேர்ந்த மாணிக்கசாமி (38), பங்களாப்புதூர் அருகே உள்ள வினோபா நகரை சேர்ந்த நாகராஜ் (32), கோபியை சேர்ந்த கோவிந்தசாமி (35), கள்ளிப்பட்டியை சேர்ந்த கணேசன் (42), தர்மபுரி மாவட்டம் கடத்தூரை சேர்ந்த பெரியசாமி (38), நெல்லை மாவட்டம் சுரண்டையை சேர்ந்த அய்யப்பன் (32) ஆகிய 6 பேர் தொழிலாளர்களாக வேலை செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் அந்தியூரை அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் உள்ள ஒசூர் கிராமத்தில் ஆழ்குழாய் கிணறு அமைப்பதற்காக ரிக் லாரியை செல்வராஜ் நேற்று ஓட்டி சென்றார். 6 பேரும் லாரியுடன் சென்றனர்.

பர்கூர் மலைப்பகுதியில் உள்ள மணியாச்சி என்ற இடத்தில் சென்றபோது லாரியின் ‘ஸ்டியரிங்’ திடீரென செயல் இழந்தது. இதனால் லாரியை செல்வராஜால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. உடனே அவர் லாரியில் இருந்த தொழிலாளர்களிடம் ‘ஸ்டியரிங்’ கட்டுப்பாடு இழந்து விட்டது. எனவே லாரியில் இருந்து குதித்து தப்பிவிடுங்கள் என்று சத்தம் போட்டு கத்தி கூறினார். தொழிலாளர்கள் சுதாகரித்து குதிப்பதற்குள் மலைப்பாதையில் இருந்த 400 அடி பள்ளத்தில் லாரி பாய்ந்தது. பள்ளத்தில் லாரி உருண்டு சென்றதில், சுக்கு நூறாக நொறுங்கி சிதறியது.

கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் லாரியில் இருந்த அனைவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இதில் லாரியின் சிதறிய பாகங்கள் விழுந்து அமுக்கியதில் மாணிக்கசாமி உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். அவருடைய உடல் பள்ளத்தில் இருந்த மரக்கிளையில் தொங்கி கொண்டிருந்தது.

உடனே அந்த பகுதியை சேர்ந்தவர்கள் இதுபற்றி பர்கூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் பர்கூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த பகுதியை சேர்ந்த மலைக்கிராம மக்கள் உதவியுடன் படுகாயம் அடைந்த டிரைவர் செல்வராஜ், நாகராஜ், கோவிந்தசாமி, அய்யப்பன், பெரியசாமி, கணேசன் ஆகிய 6 பேரையும் மீட்டு அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் செல்வராஜ், கோவிந்தசாமி ஆகியோர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

மரக்கிளையில் தொங்கிய நிலையில் கிடந்த மாணிக்கசாமியின் உடலை போலீசார் கயிறு மூலம் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்த மாணிக்கசாமிக்கு விஜயா என்ற மனைவியும், கோகுலப்பிரியா, ரஞ்சிதா என்ற மகள்களும் உள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story