ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி, ரூ.5½ லட்சம் தப்பியது


ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி, ரூ.5½ லட்சம் தப்பியது
x
தினத்தந்தி 7 Dec 2017 3:00 AM IST (Updated: 7 Dec 2017 2:42 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி நடந்தது. கொள்ளையர்களின் முயற்சி பலிக்காததால் ரூ.5½ லட்சம் தப்பியது.

புதுச்சேரி,

புதுவை பாரதி வீதி சுப்பையா சாலை சந்திப்பில் பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. நேற்று காலை இந்த ஏ.டி.எம். மையத்திற்கு வாடிக்கையாளர் ஒருவர் பணம் எடுக்கச் சென்றார். அப்போது ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இது குறித்து ஒதியஞ்சாலை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

உடனே போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் கீர்த்தி மற்றும் போலீசார் அங்கு சென்று பார்வையிட்டனர். அப்போது கொள்ளையர்கள் கடப்பாரையால் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்து இருந்தது தெரியவந்தது. இதுபற்றி வங்கி அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

வங்கி அதிகாரிகளும், ஏ.டி.எம். எந்திர பராமரிப்பு அதிகாரிகளும் அங்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது ஏ.டி.எம். எந்திரத்தில் வாடிக்கையாளர்கள் எடுத்தது போக மீதி ரூ.5 லட்சத்து 48 ஆயிரம் பணம் இருந்ததும் பணம் கொள்ளை போகவில்லை என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு போலீசார் ஆய்வு செய்தபோது ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவின் வயர்கள் துண்டிக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர்.

நேற்று முன்தினம் நள்ளிரவில் அங்கு வந்த கொள்ளையர்கள் கடப்பாரையால் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முயன்றுள்ளனர். அப்போது பணம் இருக்கும் பகுதி தானாகவே பூட்டிக்கொண்டது. எவ்வளவோ முயற்சி செய்தும் கொள்ளையர்களால் அதனை உடைக்க முடியவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் ஏ.டி.எம். எந்திரத்தை சேதப்படுத்தி விட்டு தப்பிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர். புதுவையில் எப்போதும் ஆள்நடமாட்டம் அதிகம் உள்ள முக்கியமான சாலையில் நடந்த கொள்ளை முயற்சி அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த ஏ.டி.எம். மையத்தில் காவலாளிகள் பணிக்கு நியமிக்கப்படவில்லை.


Next Story