பால்கரில் பயங்கரம் கணவர் உள்பட 3 பேரை கொன்று புதைத்த பெண் மந்திரவாதி
பால்கர் அருகே விபசார வழக்கில் கைதான பெண் மந்திரவாதி கணவர் உள்பட 3 பேரை கொலை செய்தது போலீஸ் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
வசாய்,
பால்கர் அருகே விபசார வழக்கில் கைதான பெண் மந்திரவாதி கணவர் உள்பட 3 பேரை கொலை செய்தது போலீஸ் விசாரணையில் அம்பலமாகி உள்ளது. அவரது வீட்டு கழிவுநீர் தொட்டிக்குள் இருந்து கணவரின் எலும்புக்கூடை போலீசார் மீட்டனர்.
பெண் மந்திரவாதிபால்கர் மாவட்டம் பொய்சர் கிழக்கு தாண்டிபாடாவை சேர்ந்த பெண் சவிதா(வயது42). மந்திரவாதி. இவர் சட்டவிரோதமாக பெண்களை வைத்து வீட்டில் விபசாரம் செய்து வருவதாக பொய்சர் எம்.ஐ.டி.சி. போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவத்தன்று போலீசார் சவிதாவின் வீட்டிற்கு சென்று அதிரடி சோதனை நடத்தினார்கள்.
இந்த சோதனையின் போது, அவரது வீட்டில் இருந்து 4 இளம்பெண்களை போலீசார் மீட்டனர். இது தொடர்பாக போலீசார் சவிதா உள்பட 2 பேரை கைது செய்தனர்.
போலீசார் சவிதாவிடம் விசாரணை நடத்தியபோது, அவரது கணவர் பற்றி கேட்டனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்து உள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது, திடுக்கிடும் தகவலை அவர் வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:–
கணவரை கொலைசவிதாவின் கணவர் பெயர் சகாதேவ். இவர்களுக்கு 2 மகன்கள். கடந்த 2004–ம் ஆண்டு சவிதாவுக்கு அதே பகுதியை சேர்ந்த கமலேஷ் என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. சகாதேவ் வீட்டில் இல்லாத நேரத்தில் கமலேசை வீட்டிற்கு வரவழைத்து சவிதா உல்லாசம் அனுபவித்து வந்தார். ஒருநாள் இருவரும் நெருக்கமாக இருந்ததை சகாதேவ் பார்த்து மனைவியை கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த சவிதா தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை அடித்து கொலை செய்தார்.
பின்னர் இருவரும் அவரது உடலை வீட்டிற்குள் உள்ள கழிவுநீர் தொட்டிக்குள் போட்டு, அதை நிரந்தரமாக மூடிவிட்டனர். அக்கம்பக்கத்தினர் சவிதாவிடம் கணவர் சகாதேவ் பற்றி விசாரித்தபோது, அவர் தன்னை பிரிந்து சென்றுவிட்டதாக கூறி உள்ளார். இதை அவர்களும் நம்பி உள்ளனர்.
எலும்புக்கூடு மீட்புசவிதா கூறிய இந்த தகவலை தொடர்ந்து போலீசார், அவரது வீட்டிற்கு சென்று கழிவுநீர் தொட்டியை திறந்து, தோண்டி பார்த்தனர். அப்போது, உள்ளே இருந்து சகாதேவின் உடல் எலும்புக்கூடாக மீட்கப்பட்டது. மேலும் கழிவுநீர் தொட்டிக்குள் இருந்து உபயோகிக்கப்பட்ட 4 கிலோ எடை கொண்ட ஆணுறைகளும் கண்டெடுக்கப்பட்டன.
இந்தநிலையில், போலீசார் சவிதாவிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையின் போது, அண்மையில் அவர் மேலும் 2 பேரை கொன்று உடலை புதைத்த அதிர்ச்சி தகவல் கிடைத்தது. இதில், தன்னிடம் வாடிக்கையாளராக வந்த ஒருவரை கொன்று, அவரிடம் இருந்து ரூ.1 லட்சத்தை கொள்ளை அடித்ததாகவும், மற்றொருவரை நரபலி கொடுத்து விட்டதாகவும் கூறினார். மேலும் அவர்களின் உடல்களையும் வீட்டிற்குள்ளேயே புதைத்து விட்டதாக தெரிவித்தார்.
கள்ளக்காதலனுக்கு வலைவீச்சுஇதையடுத்து போலீசார் சவிதாவின் வீடு முழுவதையும் தோண்டி பார்த்தனர். ஆனால் உடல்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதையடுத்து அவர்களின் உடல்களை கண்டுபிடிக்க போலீசார் சவிதாவிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவங்கள் தொடர்பாக போலீசார் அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இந்த கொலையில் தொடர்புடைய சவிதாவின் கள்ளக்காதலனை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
கணவர் உள்பட 3 பேரை பெண் மந்திரவாதி கொன்று புதைத்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.