சுவையான சுவாரசியங்கள் : பலம் மிகுந்த பாட்டி


சுவையான சுவாரசியங்கள் : பலம் மிகுந்த பாட்டி
x
தினத்தந்தி 8 Dec 2017 10:00 AM IST (Updated: 7 Dec 2017 2:15 PM IST)
t-max-icont-min-icon

70 வயதான் ஜெஸ்பனா செய்யும் வேலைகள், நம்மை மலைக்க வைக்கின்றன. இவர் தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க, தினமும் உடற்பயிற்சி செய்கிறார்; நடனமாடுகிறார். இதுதான், 70 வயதான ஜெஸ்பனாவை சிறந்த உடற்பயிற்சி மங்கையாக மாற்றியிருக்கிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஜெஸ்பனா, 60 வயது வரை சாதாரணமாகவே இருந்திருக்கிறார். முதுமை ஜெஸ்பனாவை நெருங்கிக் கொண்டிருக்க, ஒரு மாறுதலுக்காக உடற்பயிற்சியை ஆரம்பித் திருக்கிறார். இந்த ஆசை.. மணிக் கணக்கிலும், நாள் கணக்கிலும் மாறிவிட, சிறந்த உடற்பயிற்சி மங்கையாக மாறிவிட்டார். இப்பொழுது அமெரிக்காவில் நடக்கும் உடல் அழகிகள் போட்டியில் ஜெஸ்பனாவை மிஞ்ச ஆள் கிடையாது. அந்தளவிற்கு 10 ஆண்டுகளில் பலமும், அழகும் வாய்ந்த பெண்ணாக அவர் மாறியிருக்கிறார்.

மாடிப்படிகளில் மராத்தான்

சாலைகளிலும், மலைப்பாதையிலும் நடைபெறும் மராத்தான் போட்டிகள் சீனர்களுக்கு அலுத்துப் போய்விட்டது போல.. அதனால் தான் மாடிப்படிகளில் ஓடும் மராத்தான் போட்டிகளை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். அது வித்தியாசமாகவும், ஆச்சரியப்படுத்துவதாகவும் இருக்கிறது.



சீனாவின் பெய்ஜிங் நகரில் இருக்கும் உயரமான கட்டிடங்கள் அனைத்துமே, மராத்தான் போட்டிக்கான பந்தயக் களம் தான். மற்ற நாடுகளில் கிலோமீட்டர் கணக்கில் மராத்தான் போட்டிகள் நடத்தப்பட்டால், சீனாவில் மட்டும் மாடிக் கணக்கில் போட்டிகளை நடத்துகிறார்கள். 100 மாடி கட்டிடம், 90 மாடி கட்டிடம், 80 மாடி கட்டிடம் என்ற வகைப்பிரிவுகளில் மராத்தான் போட்டியை நடத்துவது, இந்தப் போட்டிக்கான சுவாரசியத்தை அதிகரிக்கிறது. தரை தளத்தில் இருந்து மடமடவென படிக்கட்டுகளில் ஏறி, கட்டிடத்தின் மொட்டை மாடிக்கு செல்பவர்கள் வெற்றியாளராக அறிவிக்கப்படுகிறார்கள். வித்தியாசமான போட்டி என்றாலும், சீனாவில் மாடிப்படி மராத்தானிற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக வெளிநாட்டு போட்டியாளர்களும், இந்தப் போட்டியில் பங்கேற்கிறார்கள்.

சேட்டைக்கார சர்வர்..!

ஜப்பானின் உட்சனோமியா பகுதியில் இருக்கிறது ‘காயாபுகி’ என்ற ஓட்டல். இங்கு யாட் சான் என்ற குரங்கு சர்வராக வேலை செய்கிறது. பீர் பாட்டில் தூக்கி வருவது, தட்டுகளை கொண்டு வருவது, டம்ளரில் தண்ணீர் ஊற்றுவது, பில் கொடுப்பது, வாடிக்கையாளர்களிடம் இருந்து பணத்தை வாங்கி சென்று ஓட்டல் முதலாளியிடம் கொடுப்பது என சர்வர்கள் செய்யக்கூடிய அத்தனை வேலைகளையும், யாட் சான் குரங்கு செய்கிறது.



இந்த ஓட்டலுக்கு சாப்பிட வருபவர்களை விட, இந்த குரங்கின் சேட்டைகளை பார்ப்பதற்காக வருபவர்களின் எண்ணிக்கையே அதிகம். ஓட்டலின் உரிமையாளர், யாட் சான் குரங்கை வளர்ப்பதோடு, சர்வர் பயிற்சிகளையும் வழங்கி வருகிறார்.

சுவர் இல்லாத ஓட்டல்

சுவிட்சர்லாந்தில் இருக்கிறது அப்பென்சில் என்ற கிராமம். இங்குள்ள மலை உச்சியில் அமைந்துள்ள ‘நுல் ஸ்டெர்ன்’ ஓட்டல், சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவர்ந்து வருகிறது. தரையில் இருந்து 4 ஆயிரம் அடி உயரத்தில் இருக்கும் இந்த ஓட்டலுக்கு, சுவர்களே கிடையாதாம். ‘சுவர்கள் இன்றி கட்டப்பட்டு இருப்பதால் தான், இந்த ஓட்டலுக்கு அதிக மவுசு’ என்கிறார், ஓட்டலை பராமரித்து வரும் ஜான்.



‘மலை உச்சியில் இருக்கும் இந்த ஓட்டல், சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கபுரியாக மாறிவிட்டது. இந்த மலை அடிவாரத்தில் ஏராளமான ஓட்டல்கள் இருக்கின்றன. அனைத்திற்கும் சுவர்களும் இருக்கிறது. இருப்பினும் சுவர் இல்லாத இந்த ஓட்டலை தான் மக்கள் தேடி வருகிறார்கள். சுவர்களைத் தவிர மற்ற அனைத்து வசதிகளும் இந்த ஓட்டலில் உண்டு. இரவு தூக்கம், நட்சத்திரங்களுடன் என்றால் நினைத்துப்பாருங்களேன்’ என்கிறார், ஜான். சுவர் இல்லாத ஓட்டலை இவர் பராமரிப்பதுடன், ஓட்டலில் தங்குபவர்களுக்கு உணவு சமைத்தும் பரிமாறுகிறார்.

Next Story