உதவி செய்வதில் முன் உதாரணம்


உதவி செய்வதில் முன் உதாரணம்
x
தினத்தந்தி 8 Dec 2017 12:00 PM IST (Updated: 7 Dec 2017 3:18 PM IST)
t-max-icont-min-icon

டெக்சாஸில் வசிக்கிறார் தொழிலதிபர் ரோன் ஸ்டர்ஜென். இவர் விடுமுறையை கழிப்பதற்காக ஜமைகாவுக்கு சென்றிருந்த நேரத்தில், டெக்சாஸில் புயல் வீசியது.

டெக்சாஸில் வசிக்கிறார் தொழிலதிபர் ரோன் ஸ்டர்ஜென். இவர் விடுமுறையை கழிப்பதற்காக ஜமைகாவுக்கு சென்றிருந்த நேரத்தில், டெக்சாஸில் புயல் வீசியது. இதில் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. மக்கள் தங்குவதற்கு இடம் இல்லாமல் கஷ்டப்பட்டனர். விடுமுறையை முடித்து விட்டு திரும்பி வந்த ஸ்டர்ஜென், புயலால் பாதிக்கப்பட்ட தன் நகரைக் கண்டு அதிர்ந்து போனார். 23 கோடி ரூபாய் மதிப்புள்ள தன்னுடைய 2 வீடுகளை, தங்குவதற்கு இடம் இன்றி தவிப்பவர்களுக்கு திறந்துவிடுவதாக பேஸ்புக் மூலம் தகவல் கொடுத்தார். பல்வேறு குடும்பங்கள் அவரது வீடு தேடி வந்தன. மாதத்துக்கு 1 டாலர் வாடகைக்கு 3 மாதங்கள் அந்த குடும்பங்களைத் தங்கச் சொல்லிவிட்டார்.

கார்கள் நிறுத்தக்கூடிய 10 அறைகளில், அவர்களது உடைமைகளை வைக்கச் சொன்னவர், வேறு வீடு தேடுவதற்கு வசதியாகத் தன்னுடைய கார்களையும் கொடுத்து விட்டார். ஸ்டர்ஜெனின் இந்தச் செயலைப் பாராட்டி,   இணையதளங்களில் செய்திகள் வந்துகொண்டே இருந்தன.

‘புயல் வீசியபோது நான் இங்கே இல்லை. செய்திகளில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன். இங்கே வந்தபோது நான் நினைத்ததை விட நிலைமை மோசமாக இருந்தது. தங்குவதற்கு ஒரு வீடு இருந்தால்தான், அவர்களால் மீண்டு வருவதற்கு யோசிக்கவே முடியும். என் வீட்டை விற்பதற்காக முடிவு செய்திருந்தேன். அந்த எண்ணத்தைத் தள்ளி வைத்துவிட்டு, வீடற்றவர்கள் தங்கிக் கொள்ள இடம் அளித்தேன்.

தங்குபவர்களுக்கு இலவசமாக இருக்கிறோம் என்ற சங்கடம் வரக்கூடாது என்பதற்காகத் தான், 1 டாலர் வாடகை. இந்த வி‌ஷயத்தை வெளியே தெரியப்படுத்தினால் என்னைப் போல பலரும் உதவக்கூடும் என்பதாலேயே பேஸ்புக்கில் வெளியிட்டேன். சிலர் என்னைப் பாராட்டுகிறார்கள். பலரும் இத்தனை அழகான வீட்டை இப்படிக் கொடுத்திருப்பது பைத்தியக்காரத்தனம் என்கிறார்கள். எதைப் பற்றியும் எனக்குக் கவலை இல்லை. என்னால் முடிந்த இந்த சிறிய உதவியை செய்ததில் மகிழ்ச்சிதான்! 3 மாதங்களுக்குப் பிறகு வீட்டை விற்கப் போகிறேன். வீடு இழந்தவர்களுக்குத்தான் முன்னுரிமை. விலையையும் கணிசமாகக் குறைத்து விடுவேன்’ என்கிறார் ஸ்டர்ஜென்.

‘சின்ன வயதில் வறுமையில் மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறார் ஸ்டர்ஜென். பிறகு படித்து, தொழிலதிபராக மாறியிருக்கிறார். வீடு இல்லாதவர்களின் கஷ்டம், அவரை விட வேறு யாருக்குப் புரியும்’ என்கிறார்கள் அவரது நண்பர்கள்.


Next Story