கடலில் மாயமானவர்களை மீட்க கோரி ஆயிரக்கணக்கான மீனவ மக்கள் திரண்டு ரெயில் மறியல்


கடலில் மாயமானவர்களை மீட்க கோரி ஆயிரக்கணக்கான மீனவ மக்கள் திரண்டு ரெயில் மறியல்
x
தினத்தந்தி 8 Dec 2017 4:45 AM IST (Updated: 7 Dec 2017 11:05 PM IST)
t-max-icont-min-icon

கடலில் மாயமான மீனவர்களை மீட்க வலியுறுத்தி குழித்துறை ரெயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் திரண்டு ரெயில் மறியல் போராட்டம் நடத்தினார்கள். இரவிலும் போராட்டம் நீடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகர்கோவில்,

கன்னியாகுமரி மாவட்டத்தை கடந்த 29–ந் தேதி நள்ளிரவில் ‘ஒகி’ புயல் தாக்கியது. இதனால் பலத்த காற்று வீசியதுடன் கனமழையும் கொட்டியது. கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான மீனவர்கள் புயலில் சிக்கி மாயமானார்கள். கரை திரும்பாத மீனவர்களை மீட்க மீனவர்களும், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும், அரசியல் கட்சி தலைவர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் புயல்–மழை சேதங்களை ஆய்வு செய்வதற்காக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று குமரி மாவட்டம் வந்தார்.

இது ஒருபுறம் இருக்க மாயமான மீனவர்களை மீட்கும் நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகள் மெத்தனமாக செயல்படுவதாகவும், அதற்கு கண்டனம் தெரிவிப்பதாக கூறியும் நேற்று திடீரென ரெயில் மறியல் போராட்டத்தில் மீனவ கிராமத்தினர் ஈடுபட்டனர்.

இதற்காக நேற்று காலையில் இரையுமன்துறை, பூத்துறை, தூத்தூர், சின்னத்துறை, இறவிபுத்தன்துறையை சேர்ந்த ஏராளமான மீனவர்கள் தூத்தூர் மறைமாவட்ட முதன்மை அருட்பணியாளர் ஆன்றோஸ் கோஸ்மோஸ் தலைமையில் திரண்டனர். குழித்துறை ரெயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட முடிவு செய்த அவர்கள், இதற்காக நேர்வழியாக வராமல் 13 கிலோமீட்டர் தூரம் வரை மாற்றுப்பாதையில் நடந்தே வந்து குழித்துறை ரெயில் நிலையத்தை அடைந்தனர்.

இதே போல் நீரோடி, வள்ளவிளை, மார்த்தாண்டன்துறை பகுதியை சேர்ந்த ஏராளமான மீனவ மக்களும் மார்த்தாண்டத்துக்கு வந்து பஸ் நிலையம் அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் சிறிது நேரத்தில் அங்கிருந்து பேரணியாக புறப்பட்டு குழித்துறை ரெயில் நிலையம் வந்து ரெயில் மறியல் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

ஒரே நேரத்தில் 8 மீனவ கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் ரெயில் நிலையத்துக்கு திரண்டு வந்ததால் போலீசார் செய்வது அறியாமல் திகைத்தனர். போராட்டத்துக்கு வருகிறவர்களை தடுத்து நிறுத்திட ரெயில் நிலையத்துக்கு வரும் பிரதான சாலையில் மட்டுமே போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். ஆனால் மாற்றுப்பாதை வழியாக திரண்டு வந்ததால் போலீசாரால் தடுத்து நிறுத்த முடியவில்லை. அனைவரும் தண்டவாளம் பகுதிக்கு வந்து அமர்ந்துகொண்டனர்.

போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதிப்பு ஏற்பட்ட மாவட்டமாக அறிவிக்க வேண்டும், ஆழ்கடலுக்குள் மீன்பிடிக்க சென்று கரை திரும்பாத மீனவர்களை மீட்க போர்க்கால நடவடிக்கை எடுப்பதுடன், அவர்களை தேட இந்திய கடற்படை கப்பல்கள் மற்றும் விமானங்களை கூடுதலாக பயன்படுத்த வேண்டும்,

கேரள மாநில அரசை போன்று, உயிரிழந்த மீனவர்களுக்கான இழப்பீட்டு தொகையை ரூ.20 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினர். அவர்கள் பகல் முழுவதும் கலைந்து செல்லாமல் போராட்டத்தை தொடர்ந்தனர். இதனால் நாகர்கோவில்–திருவனந்தபுரம் இடையே ரெயில்கள் எதுவும் இயக்கப்படவில்லை.

மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பத்மநாபபுரம் உதவி கலெக்டர் ராஜகோபால் சுன்காரா, மாவட்ட வருவாய் அதிகாரி இளங்கோ மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்தனர். ஆனால் பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் போராட்டம் இரவு வரை தொடர்ந்தது.

மீனவர்களின் போராட்டம் குறித்து, மீனவ அறக்கட்டளை தலைவர் சர்ச்சில் அளித்த பேட்டியில் கூறியதாவது:–

ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்களில் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த 74 பேர் இறந்துள்ளனர். 1,113 மீனவர்கள் காணாமல் போய்விட்டனர். பல மீனவர்கள் உடல்கள் கடலில் மிதப்பதாக தகவல் வருகின்றது. ஆனால், அந்த உடல்களை மீட்க கூட அரசு எந்த துரித நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

குஜராத், மராட்டியம், கர்நாடகா, லட்சத்தீவு போன்ற பகுதிகளில் கரை சேர்ந்த மீனவர்களுக்கு போதுமான அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை.

புயல் பாதிப்பு ஏற்பட்டு ஒரு வாரம் ஆகிய பிறகும் கடலோர பகுதிகளில் குடிதண்ணீர், மின்சாரம் போன்ற எந்த அடிப்படை வசதிகளும், மீட்பு பணிகளும் சரிவர நடக்கவில்லை. எனவே முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வரவேண்டும். கடற்கரை பகுதியிலேயே இருந்து மீனவர்களை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இறந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையாக ரூ.20 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சமும், புயலினால் படகு, வள்ளம், வீடு உள்ளிட்டவற்றை இழந்தவர்களுக்கு தகுந்த இழப்பீடுகளையும் தமிழக அரசு அறிவிக்க வேண்டும். புயலினால் இறந்த மீனவர்களின் குடும்பத்தினரில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வந்துள்ளார். ஆனால், புயலினால் அதிக உயிரிழப்புகளை சந்தித்துள்ள பகுதிகளுக்கு ஏன் வரவில்லை?

மீனவர்களின் உயிர்களை துச்சமாக மதித்து மெத்தனபோக்கை கடைபிடித்து வரும் தமிழக அரசு, இந்த வி‌ஷயத்தில் இனியாவது அதிக கவனம் செலுத்தி உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை எனில், பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்ட கடலோர பகுதி மீனவ மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தமிழக அரசு தங்களை கைவிட்டதாக எண்ணி, அண்டை மாநிலமான கேரளாவில் தஞ்சம் புகுவதை தவிர வேறு வழியில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சட்டைகளில் கருப்பு பேட்ஜ் அணிந்து இருந்தனர். ஒரு சிலர் கருப்பு கொடிகளை ஏந்தி நின்றனர். பெண்கள் மற்றும் இளைஞர்கள் தண்டவாளத்தில் குறுக்காக படுத்துக்கொண்டு மத்திய, மாநில அரசுக்கு எதிராக கோ‌ஷங்களை எழுப்பினர்.

இந்த போராட்டத்தில் பங்குத்தந்தைகள் ஆன்டோ ஜோரிஸ், பெபின்சன், ஷாபின், அரிஸ்டோ, மார்பின், லூசியான், டார்வின், சேவியர் ஆகியோரும் கலந்துகொண்டனர். போராட்ட ஒருங்கிணைப்பாளராக மீனவ அறக்கட்டளை தலைவர் அருட்பணியாளர் சர்ச்சில் செயல்பட்டார்.

ரெயில் மறியலையொட்டி நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கார், போலீஸ் சூப்பிரண்டுகள் மணிவண்ணன், அருண்சக்தி குமார், மகேந்திரன் மற்றும் ஏராளமான போலீசார், தீயணைப்பு படையினர் குழித்துறை ரெயில் நிலையத்தில் குவிக்கப்பட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் குமரி மாவட்ட கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் போராட்டக்காரர்கள் கலைந்து செல்ல மறுத்தனர்.


Next Story