தூத்துக்குடி அருகே நின்ற லாரி மீது வேன் மோதியதில் 2 பேர் பலி


தூத்துக்குடி அருகே நின்ற லாரி மீது வேன் மோதியதில் 2 பேர் பலி
x
தினத்தந்தி 8 Dec 2017 2:45 AM IST (Updated: 8 Dec 2017 12:03 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அருகே நின்று கொண்டு இருந்த லாரி மீது வேன் மோதியதில் 2 பேர் பலியானார்கள்.

ஓட்டப்பிடாரம்,

தூத்துக்குடி அருகே நின்று கொண்டு இருந்த லாரி மீது வேன் மோதியதில் 2 பேர் பலியானார்கள்.

லாரி மீது வேன் மோதியது

சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா பஞ்சுகாளிபட்டியை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் ஒபிலிராஜ்(வயது 29). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் துணை முதல்வராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி பிரியங்கா(23). இவர்களின் மூன்று வயது மகன் ஒபிலிகிரிஷ்.

ஒபிலிராஜ், தனது மகனின் மூன்றாவது பிறந்த நாளை திருச்செந்தூர் முருகன் கோவிலில் வைத்து கொண்டாடுவதற்காக சேலத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு தனது உறவினர்களுடன் ஒரு வேனில் திருச்செந்தூர் புறப்பட்டார். வேனை ஓமலூரை சேர்ந்த சரவணன்(23) ஓட்டினார். நேற்று காலை 6.50 மணிக்கு தூத்துக்குடி அருகே புதூர்பாண்டியாபுரம் சுங்கச்சாவடி முன்பு வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் நின்று கொண்டு இருந்த லாரி மீது வேன் பயங்கரமாக மோதியது.

2 பேர் பலி

இந்த விபத்தில் வேனில் இருந்த ஒபிலி ராஜின் உறவினர்களான குருநாதன் மகன் நவீன்(23), லட்சுமி (50) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்கள். விபத்து நடந்தவுடன் வேனில் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டவர்கள் அய்யோ... அம்மா.. காப்பாற்றுங்களேன்... என்று அபயக்குரல் எழுப்பினார்கள்.

அப்போது அந்த பகுதியில் இருந்தவர்கள் ஓடி வந்து வேனுக்குள் சிக்கிக்கொண்டவர்களை ஒருவர் பின் ஒருவராக மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

12 பேர் காயம்

இந்த விபத்தில் வேனில் இருந்த ஒபிலிராஜ், அவருடைய தந்தை செல்வராஜ், ஒபிலிராஜின் மனைவி பிரியங்கா, வேன் டிரைவர் சரவணன், உமாராணி, குப்புராணி, ரகுநாதன், சசிகலா, ஒபிலிராஜின் மகன் ஒபிலி கிரிஷ், சித்ரா, மற்றொரு ஒபிலிராஜ் உள்பட 12 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவருக்கும் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து புதியம்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story