ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா 18-ந்தேதி தொடங்குகிறது 29-ந்தேதி சொர்க்கவாசல் திறப்பு


ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா 18-ந்தேதி தொடங்குகிறது 29-ந்தேதி சொர்க்கவாசல் திறப்பு
x
தினத்தந்தி 8 Dec 2017 4:15 AM IST (Updated: 8 Dec 2017 12:08 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வருகிற 18-ந்தேதி வைகுண்ட ஏகாதசி விழா தொடங்குகிறது. சொர்க்கவாசல் 29-ந்தேதி திறக்கப்படுகிறது.

ஸ்ரீரங்கம்,

பூலோக வைகுண்டம், 108 திவ்ய தேசங்களில் முதன்மையானது என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் முதன்மையானது வைகுண்ட ஏகாதசி விழாவாகும். ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதத்தில் நடைபெறும் திரு அத்யயன உற்சவம் வைகுண்ட ஏகாதசி விழாவாக கொண்டாடப்படுகிறது.

பகல்பத்து, ராப்பத்து இயற்பா என மொத்தம் 21 நாட்கள் இந்த விழா நடைபெறும். இந்த விழாக்காலங்களில் ரெங்கநாதர் கோவில் மட்டுமின்றி ஸ்ரீரங்கம் நகரமே திருவிழாக்கோலம் பூண்டு காணப்படும். இதில் தமிழகத்தின் அனைத்து பகுதிகள், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறும் 20 நாட்களும் பெரிய பெருமாள் எனப்படும் மூலவர் முத்தங்கியுடன் சேவை சாதிப்பார். பகல் பத்து உற்சவத்தின்போது உற்சவர் நம்பெருமாள் தினமும் காலை அர்ச்சுன மண்டபத்திலும், ராப்பத்து உற்சவத்தின்போது திருமாமணி மண்டபம் எனப்படும் ஆயிரங்கால் மண்டபத்திலும் அனைத்து ஆழ்வார்கள், ஆச்சாரியர்களுடன் எழுந்தருளி சேவை சாதிப்பது மிகவும் சிறப்பானதாகும்.

இத்தகைய சிறப்புமிக்க வைகுண்ட ஏகாதசி விழா வருகிற 18-ந்தேதி (திங்கட்கிழமை) திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்குகிறது. மறுநாள் (செவ்வாய்க்கிழமை) பகல்பத்து உற்சவத்தின் முதல் நாள் ஆகும். அன்றைய தினம் நம்பெருமாள் காலை 7 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி காலை 7.45 மணிக்கு அர்ச்சுன மண்டபம் வந்தடைவார். காலை 8.15 மணி முதல் பகல் ஒரு மணி வரை அரையர்கள் நம்பெருமாள் முன் நின்று நாலாயிரம் திவ்யப்பிரபந்த பாடல்களை அபிநயம் மற்றும் இசையுடன் பாடுவார்கள்.

மாலை 6.30 மணிக்கு அர்ச்சுன மண்டபத்தில் இருந்து புறப்படும் நம்பெருமாள், இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார். இதே போல் ஒவ்வொரு நாளும் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.

பகல்பத்து உற்சவத்தின் 10-வது நாள் (28-ந்தேதி) நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி சேவை சாதிப்பார். 29-ந்தேதி ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் வைகுண்ட ஏகாதசி திருநாள் ஆகும், அன்றைய தினம் அதிகாலை 3.45 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்படும் நம்பெருமாள் அதிகாலை 5 மணிக்கு பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசலில் எழுந்தருள்வார். இதுவே வைகுண்ட ஏகாதசி விழாவின் சிகர நிகழ்ச்சியாகும். சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு நம்பெருமாளுடன் பரமபதவாசலை கடந்து செல்வார்கள். தொடர்ந்து ஜனவரி 8-ந்தேதி வரை விழா நடைபெறும்.

விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் வேணு சீனிவாசன், இணை ஆணையர் ஜெயராமன், அறங்காவலர்கள் சீனிவாசன், கவிதா ஜெகதீசன், ரெங்காச்சாரி, சுழல்முறை அறங்காவலர் வெங்கடேச உத்தம நம்பி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.

வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு அனைத்து துறை அதிகாரிகளுடனான ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நேற்று கலெக்டர் கே. ராஜாமணி தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தை தொடங்கி வைத்து கலெக்டர் பேசும்போது கூறியதாவது:-

திருச்சி மாநகராட்சி சார்பில் ஸ்ரீரங்கம் பஸ்கள் நிற்குமிடத்தில் பொதுமக்கள் பஸ்களில் வசதியாக ஏறவும், இறங்கவும் தடுப்புகள் அமைக்கப்படும். கோவில் சுற்றுப்புறப் பகுதிகள் மற்றும் ஸ்ரீரங்கம் நகரம் முழுவதும் சுகாதார ஏற்பாடுகள் செய்யப்படும். முக்கியவிழா நாட்களான 28-ந்தேதி முதல் 30-ந்தேதி முடிய நாள் முழுவதும் குடிநீர் குழாய்களில் தண்ணீர்விட ஏற்பாடு செய்யப்படும். மேலும் தற்காலிக குடிநீர் வழங்க சின்டெக்ஸ் தொட்டிகள் அமைக்கப்படும். அம்மாமண்டபம் படித்துறை, கொள்ளிடம் படித்துறையில் பொதுமக்கள் இரவு, பகல் எந்நேரமும் உபயோகப்படுத்திக் கொள்ளும் வகையில் அதிகப்படியான மின்விளக்குகள் அமைக்கப்படும். பொதுமக்கள் தங்குவதற்கு வசதியாக மாநகராட்சி பள்ளிகள் ஒதுக்கீடு செய்து தரப்படும். மேலும் முக்கிய விழா நாட்களில் சிறப்பு ரெயில்கள் இயக்கவும், அனைத்து விரைவு ரெயில் வண்டிகளும் ஸ்ரீரங்கம் ரெயில் நிலையத்தில் நின்று செல்லவும், கூடுதலான இடஒதுக்கீடு பெறவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story