பாளையங்கோட்டையில் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி கலெக்டர் தொடங்கி வைத்தார்


பாளையங்கோட்டையில் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி  கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 8 Dec 2017 3:30 AM IST (Updated: 8 Dec 2017 12:27 AM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டையில் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியை கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்.

நெல்லை,

பாளையங்கோட்டையில் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியை கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்.

அறிவியல் கண்காட்சி

நெல்லை மாவட்ட அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டம் சார்பில் பாளையங்கோட்டை பிளாரன்ஸ் சுவைன்சன் காது கேளாதோர் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அறிவியல் கண்காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. சுமார் 50–க்கும் மேற்பட்ட அரங்கங்களை மாணவர்கள் வைத்து இருந்தனர்.

2 நாள் கண்காட்சி நேற்று தொடங்கியது. தொடக்க நிகழ்ச்சிக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் மாணவர்களின் படைப்புகளை பார்வையிட்டார்.

அப்போது கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறியதாவது:–

படைப்பாற்றல் அதிகரிக்கும்

நெல்லை மாவட்ட அளவில் மாணவ– மாணவிகளுக்கான அறிவியல் கண்காட்சி நடத்துவது அவசியமான ஒன்றாகும். இதன்மூலம், மாணவர்களின் படைப்பாற்றல் அதிகரிக்கும். நமது கல்வி அமைப்பில் பாடத்திட்டங்கள் கட்டுரை வடிவில் உள்ளது. இதுபோன்று அறிவியல் கண்காட்சியில் செயல்விளக்க முறையில் நடத்துவதால் மாணவ– மாணவிகளின் அறிவுத்திறன் மேம்படும்.

மாணவ, மாணவிகளுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்படாத வகையில் பள்ளிக்கூடங்களை தூய்மையாக பராமரிக்க வேண்டும். தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் குழுக்களை அமைத்து தூய்மை பணிகளை கண்காணிக்க வேண்டும். பள்ளி வளாகங்களை தூய்மையாகவும், கொசுப்புழு உற்பத்தியாகாமல் வைத்திருக்கும் பொறுப்பு ஒவ்வொரு பள்ளி தலைமை ஆசிரியருக்கும், ஆசிரியர்களுக்கும் உண்டு.

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பஸ் நிலைய பகுதியை சுத்தம் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார். பள்ளி வளாகம் மட்டுமின்றி தாங்கள் குடியிருக்கும் வீடுகள், தெருக்கள் பகுதியையும் தூய்மையாக வைத்து இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் தனமணி, நெல்லை கல்வி மாவட்ட அலுவலர் ஜெயபாண்டி, உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் தனசிங் ஐசக் மோசஸ், மாவட்ட கல்வி ஒருங்கிணைப்பாளர் கஜேந்திரபாபு, பள்ளி தலைமை ஆசிரியர் ஜான்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story